குஜராத்தில் வேட்பாளர்களை கடத்தியதாக ஆம் ஆத்மி கூறிய குற்றச்சாட்டு பொய்யானது - அனுராக் தாக்கூர்

குஜராத்தில் வேட்பாளர்களை கடத்தியதாக ஆம் ஆத்மி கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-16 15:20 GMT

புதுடெல்லி,

குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சூரத் (கிழக்கு) தொகுதி வேட்பாளாராக அறிவிக்கப்பட்டு இருந்த கஞ்சல் ஜரிவாலை பாஜக கடத்தி விட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. வேட்பு மனுவை திரும்பப் பெற கடந்த சில நாட்களாகவே கெஜ்ரிவாலுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் தற்போது அவர் மாயமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குஜராத்தில் வேட்பாளர்களை கடத்தியதாக ஆம் ஆத்மி கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும் அரசியலுக்கு வந்ததில் இருந்தே, அவர்கள் பொய் பேசுவதில் புதிய யுகத்தை படைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர்களின் பொய்கள் அம்பலமாகும்.

டெல்லியில் அவர்களின் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றார்கள், ஆனால் அவர்கள் திரையரங்கில் படம் பார்த்து ரசித்ததும், உணவு, ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு காலத்தில் ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் இப்போது ஊழலில் மூழ்கியுள்ளனர்.

இந்த குறிப்பிட்ட விசயங்கள்(ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தல்) தொடர்பான விவரங்கள் எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் அவர்களின் முந்தைய அறிக்கைகளைப் பார்த்தால், அவை போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெறவும், தங்களது ஊழலை மறைக்கவும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்