தமிழகத்தில் 200 கட்சிகள் உள்பட நாட்டில் 2,597 மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு 6 கட்சிகளுக்கு தேசிய கட்சிக்கான அங்கீகாரம்
தமிழ்நாட்டில் 200 உள்பட நாடு முழுவதும் 2,597 மாநில கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு செயல்முறையில் உள்ளன.
புதுடெல்லி,
இந்திய தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மாநில கட்சிகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புது பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது இந்திய தேர்தல் கமிஷன் புதிய பட்டியலை தயாரித்து உள்ளது.
இதன்படி நாட்டில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 கட்சிகள் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக உள்ளன.
மாநில கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகும்.
இவை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாநிலக்கட்சிகள் அனைத்தும் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ளன. தமிழ்நாட்டில் இந்த கட்சிகளின் எண்ணிக்கை 200 ஆகும். நாடு முழுவதும் இப்படி பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,597 என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டு முறையாக செயல்படாத கட்சிகள் என 218 மாநிலக்கட்சிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 282 கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 15 கட்சிகள் பழைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சிகளாக உள்ளன.