தேசத்துரோக வழக்கு ; டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர் பீகாரில் கைது

தேசத்துரோக வழக்கில் டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர் பீகாரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-01-28 12:08 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வருபவர் மாணவர் ஷர்ஜீல் இமாம். இவர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று வைரலானது.  அதில் அவர் பேசும்பொழுது, நாம் அனைவரும் ஒன்றிணைந்தோம் என்றால், இந்தியாவில் இருந்து வடகிழக்கு பகுதியை பிரித்து விடலாம். இந்தியாவில் இருந்து அசாமை பிரிப்பது என்பது நம்முடைய பொறுப்பு நிறைந்த கடமை.  அசாம் பிரிவது நடந்த பின்பே அரசு, நாம் கூறுவது பற்றி கேட்கும் என பேசியுள்ளார்.  தேசத்திற்கு எதிரான இவரது பேச்சு சர்ச்சையானது.

மக்களை தூண்டும் வகையில் பேசியதற்காக இவர் மீது அசாம் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.  கடந்த 16ந் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று, டெல்லி போலீசார் இவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வதற்கான பணியில் ஈடுபட்டனர். இதனிடையே பீகாரின் ஜெகனாபாத் நகரில் இருந்த அவரை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இதுபற்றி பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் கூறும்பொழுது, தேச  விருப்பத்திற்கு எதிரான எதனையும் யாரும் செய்ய கூடாது. இந்த  குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்றம் முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை பற்றி டெல்லி குற்றப்பிரிவை சேர்ந்த உயரதிகாரி ராஜேஷ் தியோ கூறும்பொழுது, ஜெகனாபாத்தில் உள்ள அவரது கிராமத்தில் வைத்து இன்று மதியம் 2 மணியளவில் ஷர்ஜீல் கைது செய்யப்பட்டார்.  அவரை பீகாரில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரும் முயற்சிகளை எடுத்து வருகிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்