மக்கள் நல பணியாளர்கள் வழக்கு: தமிழக அரசின் மனு மீது மார்ச் மாதம் இறுதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மக்கள் நல பணியாளர்கள் வழக்கு தொடர்பாக, தமிழக அரசின் மனு மீது இறுதி விசாரணையை மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-11-29 21:15 GMT
புதுடெல்லி,

தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதுவரை ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்