அஜித் பவாருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்கப்படும் என தகவல்

மராட்டியத்தில் அஜித் பவாருக்கு மீண்டும் துணை முதல் மந்திரி பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Update: 2019-11-29 04:17 GMT
மும்பை,

மராட்டியத்தில் பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைப்பதாக இருந்தது.  ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், திடீரென அக்கூட்டணியிலிருந்து விலகி தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் சாய்ந்தார். இதனைத் தொடர்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக, மராட்டிய  முதல்வராக தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பொறுப்பேற்றனர்.

எனினும், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், முதல்வர் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வர் அஜித் பவாரும் தங்கள் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராக நேற்று பதவியேற்றார். 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 மந்திரிகளுக்கும் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய அஜித் பவாருக்கு நேற்று மந்திரி சபையில் எந்த இடமும் வழங்கப்படவில்லை. இதனால், அஜித் பவார்  மீண்டும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்குவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.  உத்தவ் தாக்ரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு  அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 

மேலும் செய்திகள்