ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காமல் நடத்துவது கடினம் -விமான போக்குவரத்து அமைச்சர்

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் அதை நடத்துவது மிகவும் கடினம் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-27 12:08 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து கடன் சுமையில் சிக்கி இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில், ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால் விமானிகள் பதவி விலக வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காமல் நடத்துவது கடினம் என்று தெரிவித்தார்.

மேலும், “ஏர் இந்தியா தற்போது ஒரு முதல் தர நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நேரத்தில் அதை தனியாரிடம் விற்பது லாபகரமாக இருக்கும். இல்லையென்றால் வரும் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை நடத்துவது மிகவும் கடினமாகிவிடும்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சாதகமாக அமையும்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்