காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும் அங்கு 27-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-31 07:58 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு  யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. 

இந்த நடவடிக்கைகளால் வதந்திகள் பரவி, வன்முறைகள் வெடிப்பதை தடுக்கும் நோக்கில், ஜம்மு காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் சேவை, நாளேடுகள், ஊடகங்களுக்கு கட்டுப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டதால் மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தனர். கடந்த சில நாட்களாக இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்புநிலைக்கு மக்கள் வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை தினம் என்பதால்,  காஷ்மீரில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இன்று காஷ்மீரில்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பள்ளத்தாக்கு பகுதிகளை தவிர்த்து, காஷ்மீரின் ஏனைய இடங்களில், சாலையில் இருந்த போலீஸ் தடுப்புகள் அகற்றப்பட்டன. இருப்பினும், காஷ்மீரில் 27-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்