காஷ்மீரைச் சேர்ந்த ‘பேஸ் புக்’ உபயோகிப்பாளர்கள் 5 பேர் மீது வழக்கு

அமைதியை குலைக்கும் பதிவுகள் வெளியிட்டதாக, காஷ்மீரைச் சேர்ந்த ‘பேஸ் புக்’ உபயோகிப்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-08-29 21:30 GMT
ஜம்மு,

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றியதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட்டன.

அந்த வகையில், உணர்ச்சியைத் தூண்டி விட்டு சமூக அமைதியை கெடுக்கிற வகையில் யாரேனும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அப்படி போலீசார் கண்காணித்த போது, பிற மாநிலங்களில் வேலை பார்க்கிற காஷ்மீரை சேர்ந்த ஜாகீர் சவுத்ரி, ஜாகீர் ஷா புகாரி, இம்ரான் காஜி, நசீக் உசேன், சர்தார் தாரிக் கான் ஆகிய 5 பேர் தங்களது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அமைதியைக் குலைக்கிற வகையில், தவறான பதிவுகளை வெளியிட்டு வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

அவர்களது பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரஜவுரி போலீஸ் சூப்பிரண்டு யூகல் மன்ஹாஸ் கூறினார்.

மேலும் செய்திகள்