”ஐ.ஐ.டி-யில் தையல்காரரின் மகனுடன் எனது மகன் படிப்பது மகிழ்ச்சி”-அரவிந்த் கெஜ்ரிவால்

ஐ.ஐ.டி-யில் தையல்காரரின் மகனுடன் எனது மகன் சேர்ந்து படிப்பது மகிழ்ச்சியளிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Update: 2019-08-28 06:53 GMT
புதுடெல்லி,

கடந்த மே மாதம் நடந்த சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.4 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கிட் என்பவருக்கும், டெல்லி ஐ.ஐ.டி இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பில் படித்த நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த தையல்காரனின் மகனான விஜய் குமாருக்கும் ஒரே ஐ.ஐ.டி.-யில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கெஜ்ரிவால் டுவிட்டரில், "தையல்காரரின் மகனான விஜய் குமார் இலவச ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பில் படித்த அவருக்கும் எனது மகனுக்கும் ஒரே ஐ.ஐ.டி-யில் படிக்க  இடம் கிடைத்துள்ளது மகிழ்சி அளிக்கிறது; இது டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவு” என்று கூறியுள்ளார்.

"எனது மகனும் அவரது மகனும் ஒரே இடத்தில் படிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நல்ல கல்வி கிடைக்காத நிலையில் ஒரு ஏழையின் மகன் அதே நிலையில் இருக்கிறான் என்று ஒரு மரபு உள்ளது. தரமான கல்வியும், பயிற்சியும் அந்த மரபை உடைத்து ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வேற்றுமையை ஒழிக்கிறது "என்று மேலும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கல்வியை மேம்படுத்துபதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ள கெஜ்ரிவால் அரசாங்கம் கல்வி மற்றும் அதன் வசதிகளை தரப்படுத்தும் டெல்லி அரசின் முயற்சிகளுக்கு பல கல்வியாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்க உதவும் வகையில் டெல்லி அரசு ஏற்படுத்திய சிறப்பு வகுப்புகள் கல்வியாளர்களாலும் அரசியல்வாதிகளாலும் பாராட்டப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா 2014-ஆம் ஆண்டு நடந்த 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பின்னர், அவர் ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ) தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கெஜ்ரிவால் இந்திய வருவாய்த்துறையில் (ஐ.ஆர்.எஸ்) சேருவதற்கு முன்பு, கராக்பூர் ஐ.ஐ.டி-யில் பொறியியல் கல்வியை பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்