மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார். #PinarayiVijayan #KeralaFloods

Update: 2018-08-11 08:02 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் சில நாட்களாக ஓய்ந்து இருந்த தென்மேற்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

கடந்த இரு நாட்களில் பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.  இதனையடுத்து,  கேரள மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும்,  வெள்ளத்தில் வீடு மற்றும் விளைநிலங்களை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்