ஸ்மார்ட் போன்களில் தானாக ‘சேவ்’ ஆன உதவி எண்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆதார் ஆணையம் விளக்கம்

ஸ்மார்ட் போன்களில் உதவி எண்களை இணைக்க எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று ஆதார் ஆணையம் விளக்கமளித்துள்ளது. #Aadhaar #UIDAI

Update: 2018-08-03 11:18 GMT
புதுடெல்லி,

ஆதார் அடையாளம் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை தொடரும் நிலையில், ஆதார் ஆணையத்திற்கு தலைவலியாக மற்றொரு பிரச்சனை எழுந்துள்ளது. 1800-300-1947 என்றிருந்த ஆதார் உதவி எண் 1947 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பயனாளர்களின் அனுமதியின்றி பல ஸ்மார்ட் போன்களில் தானாகவே சேவ் ஆகியுள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இன்று சமூக வலைதளங்களில் இது தொடர்பான காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. தனிநபருக்கு சொந்தமான ஸ்மார்ட் போனில் எப்படி அனுமதியில்லாமல் உதவி எண் சேவ் செய்யப்படலாம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
 
“என்னுடைய ஸ்மார்ட் போனிலும் உதவி எண் சேவ் ஆகியுள்ளது. நான் இந்த எண்ணை சேவ் செய்யவில்லை, உங்களுடைய போனை சோதனை செய்யுங்கள், மிகவும் கவலையாக உணர்கிறேன்,” என்றெல்லாம் பயனாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்தை பகிர்ந்து வந்தார்கள். இதுதொடர்பாக ஆதார் ஆணையத்திற்கு  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு வல்லுநர் எலியட் ஆண்டர்சன் கேள்விகளை எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பான அவருடைய டுவிட்டர் பதிவில், ‘பல நிறுவனங்களை சேர்ந்த ஸ்மார்ட் போன் பயனர்கள், ஆதார் ஆப்-ஐ தரவிறக்கம் செய்யாத போதிலும், ஆதார் உதவி எண் அவர்களின் போனில் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள ஆதார் ஆணையம் (யூ.ஐ.டி.ஏ.ஐ ) விளக்கம் அளித்துள்ளது. இதுபோன்ற வசதியை ஸ்மார்ட் போன்களில் சேவ் செய்வதற்கு யாருக்கும் எந்தஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கோ, தொலைதொடர்பு சேவை வழங்குனர்களுக்கோ இத்தகைய வசதிகளை வழங்குவதற்காக எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. 18003001947 என்ற எண் ஆதாரின் இலவச சேவை அழைப்பு எண் கிடையாது. பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பயனற்ற நோக்கத்துடன் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. உதவி எண் 1947 ஆகும். கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாகவே இது பயன்பாட்டில் உள்ளது. 1947 சேவை எண்ணை ஸ்மார்ட் போனில் இணைக்க யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்