வங்கிகளில் பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும்: பிரதமரிடம் சர்க்கரை ஆலைகள் சங்கம் நேரில் கோரிக்கை

வங்கிகளில் பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தினர் நேரில் சென்று கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-08-02 23:45 GMT
புதுடெல்லி, 

தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக பழனி ஜி.பெரியசாமி உள்ளார். அவரது தலைமையில் அந்த சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர் டெல்லிக்குச் சென்று மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கைகள் விடுப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

அதற்கான ஏற்பாடுகளை நிர்லா சீதாராமன் செய்ததைத் தொடர்ந்து, பிரதமரை இந்த சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளின் நிலமையை அவர்கள் பிரதமரிடம் எடுத்துக் கூறினார்கள்.

அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் கரும்பு விவசாயம், 5 லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த 5 பருவ காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யவில்லை. இதனால் 141 ஆண்டுகளாக காணப்படாத வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது கரும்பு விளைச்சலை வெகுவாக பாதித்துள்ளது.

இதனால் சர்க்கரை உற்பத்திக்கான செலவு அதிகம் ஏற்பட்டு வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது. கடுமையான பணமுடை ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், விவசாயிகளுக்கான உரிய தொகையை அளிக்க வேண்டியதோடு, வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. எனவே கடனை திருப்பி செலுத்துவதில் எங்களுக்கு கால நீட்டிப்பு (அவகாசம்) அளிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் முறையிட்டனர்.

இதை கவனமுடன் கேட்ட பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியதோடு, சங்கத்தினரின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்