நீல திமிங்கலம், கிக்கி சவாலை தொடர்ந்து மற்றொரு விபரீத சவால்

நீல திமிங்கலம், கிக்கி சவாலை தொடர்ந்து மற்றொரு விபரீத சவால் பரவி வருகிறது.

Update: 2018-08-02 13:12 GMT

சமீப காலங்களில் நீல திமிங்கல விளையாட்டு, கிக்கி நடனம் ஆடும் சவால் என இளம் தலைமுறையினருக்கு ஆபத்து விளைவிக்கும் விசயங்கள் டிரென்டிங் ஆகி வருகிறது.

புளூவேல் சேலஞ்ச் எனப்படும் நீல திமிங்கலம் விளையாட்டு ஆனது ரஷ்யாவில் இருந்து பிரபலம் அடைந்தது.  இந்த விளையாட்டின்படி 50 நாள்களில் நிர்வாகிகள் தரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  இறுதி சவாலில் விளையாடுபவர் தற்கொலை செய்ய வேண்டும் என இருக்கும்.

இந்த விளையாட்டால் உலகம் முழுவதிலும் சிறுவர்கள், இளைஞர்கள் என 130 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.  மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் இதற்கு பலர் அடிமையாகி தற்கொலை செய்துள்ளனர்.

இதேபோன்று கிக்கி சவால் சமீபத்தில் பிரபலம் அடைந்து வருகிறது.  காரில் இருந்து இறங்கி சாலையோரம் நடனம் ஆட வேண்டும் என்பது இந்த சவால்.  இதனை செய்ய வேண்டாம் என இந்தியாவில் பல மாநிலங்களில் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கிக்கி நடனம் ஆடி சமூக வலைத்தளங்களில் அவற்றை வெளியிட்டு பலரது கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்டர்நெட்டில் புதிய சவால் ஒன்று டிரென்டிங் ஆகி வருகிறது.  ஒரு வாளியில் கொதிக்க வைத்த நீரை எடுத்து கொண்டு மக்களிடம் செல்ல வேண்டும்.  அவர்கள் அறியாத நிலையில், வாளி தண்ணீரை அவர்கள் மீது ஊற்ற வேண்டும்.  அவர்கள் வலியால் அழும்பொழுது அதனை படம் பிடிக்க வேண்டும்.

இதுபோன்ற சவாலால் சமீபத்தில் இண்டியானா பகுதியை சேர்ந்த கைலேண்ட் கிளார்க் என்ற 15 வயது சிறுவனுக்கு 2வது நிலை தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று மற்றொரு சவாலும் உள்ளது.  கொதிக்கும் நீரை ஒருவருக்கு தெரியாமல் ஸ்டிரா வைத்து குடிக்க செய்ய வேண்டும்.  இதில் பலருக்கு 2வது மற்றும் 3வது நிலை தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த முட்டாள்தனம் நிறைந்த சவாலால் 8 வயது சிறுமி உயிரிழந்து உள்ளாள்.  அவரது மாமாவே இந்த சவாலை செய்யும்படி சிறுமியிடம் கூறியுள்ளார்.  இளம் வயதினர், குழந்தைகள் இதுபோன்ற செயல்களை செய்யாமல் தடுக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், உலகையே அதிர செய்த நீல திமிங்கலம் சவால், சமீபத்தில், டிடெர்ஜெண்ட் பேக்கெட்டுகளை அப்படியே சாப்பிடுவது என்ற டைடு போட் சவால் ஆகியவை ஆபத்தினை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விசயங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன.

மேலும் செய்திகள்