குழந்தை கடத்தல் வதந்தி: ‘அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

குழந்தை கடத்தல்காரர்கள் என்ற வதந்தியின் பெயரால், அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-07-06 00:00 GMT
புதுடெல்லி, 

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பெயரால் அப்பாவி மக்கள் பலர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்கள், தாக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

பொய்யான தகவல்களை, வெறுப்புணர்வு ஏற்படுத்துகிற வதந்திகளை ‘வாட்ஸ்-அப்’ மற்றும் ‘பேஸ் புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரப்புவதே இத்தகைய விபரீத சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் மட்டுமே அசாம், ஆந்திரா, திரிபுரா, மராட்டியம், மேற்கு வங்காளம், தெலுங்கானா மாநிலங்களில் தலா 2 பேரும், குஜராத், கர்நாடக மாநிலங்களில் தலா ஒருவரும் என 14 பேர் இப்படி குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக்கொல்லப்பட்டு உள்ளனர்.

சில தினங்களுக்கு முன் மராட்டிய மாநிலம், துலேயில் 5 பேர் இப்படி அடித்துக்கொல்லப்பட்டது, துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த 2 வாலிபர்கள், மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் குறுக்கே பாய்ந்த ஒரு சிறுவனை தடுத்து நிறுத்த முற்பட்டபோது, தாக்குதலுக்கு ஆளாகினர். பின்னர் போலீசார் அவர்களை மீட்டனர்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நாளும் நடந்து வருவது மத்திய அரசுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்து உள்ளது.

குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பெயரால் வெறுப்புணர்வையும், வதந்தியையும் பரப்புவதை ‘வாட்ஸ் அப்’ நிறுவனம் தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிற ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம், அரசாங்கம், மனித சமூகம், தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒன்றுபட்டு, இத்தகைய போலி செய்திகள், தவறான தகவல்களை தடுக்க முடியும் என்று குறிப்பிட்டது.

இது தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய நோட்டீசுக்கு அந்த நிறுவனம் பதில் அளித்தது. அதில் ‘ஸ்பேம்’-ஐ (கண்மூடித்தனமாக ஒரே செய்தியை எண்ணற்றோருக்கு அனுப்புவதை) தடுக்கிற ஆற்றல் இருக்கிறது. ஆனால், தனிநபர் தகவல்களைப் பொறுத்தமட்டில், உபயோகிப்பாளர்கள் அறிக்கையின்பேரில் மட்டுமே தடுக்க முடியும் என கூறி உள்ளது.

இந்தநிலையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளைப் பரப்பி குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

இது தொடர்பாக ஆபத்தான பகுதிகளை அடையாளம் காணவும், அங்கெல்லாம் பொதுமக்களை சென்று அடைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

குழந்தைகள் கடத்தல் பற்றிய புகார்கள் வருகிறபோது, அதில் பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் சரியான படிக்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் மத்திய அரசு கேட்டு உள்ளது.

இந்த தகவல்களை உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்