டெல்லியில் 2 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மர பெட்டியில் எலும்பு கூடாக மீட்பு

புதுடெல்லியில் 2 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் வீட்டின் அருகே மற்றொரு வீட்டு மேல் தளத்தில் மர பெட்டியில் எலும்பு கூடாக மீட்கப்பட்டு உள்ளான்.

Update: 2018-06-04 07:17 GMT

புதுடெல்லி,

புதுடெல்லியில் ஷாகிபாபாத் பகுதியில் வசித்து வந்த சிறுவன் முகமது ஜெய்த் (வயது 4).  கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 1ல் ஜெய்த் கடத்தப்பட்டான்.  அவனை கடத்தியவர்கள் ரூ.10 லட்சம் கேட்டு பெற்றோரை மிரட்டினர்.  ரூ.8 லட்சம் வாங்கி கொள்ள முடிவானது.

ஆனால் பணம் பெறும்பொழுது கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின் ஜாமீனில் வெளிவந்தனர்.  ஆனால் காணாமல் போன சிறுவன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சிறுவர்கள் சிலர் தெருவில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்துள்ளனர்.  அவர்களில் ஜெய்தின் சகோதரனும் இருந்துள்ளான்.  அவர்களது பந்து காணவில்லை என கட்டிடம் ஒன்றின் மேல்தளத்திற்கு சென்று தேடியுள்ளனர்.  அங்கு மர பெட்டி ஒன்று இருந்துள்ளது.  அதில் எலும்பு கூடு ஒன்றும் இருந்துள்ளது.

இதுபற்றி அந்த வீட்டில் வசிப்போரிடம் சிறுவர்கள் கூறியுள்ளளனர்.  ஜெய்தின் பள்ளி சீருடையை வைத்து அவனது தந்தை சிறுவனை அடையாளம் காட்டினார்.  அதன்பின் எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  டெல்லியில் 2 வருடங்களுக்கு முன் கடத்தல்காரர்களிடம் சிக்கிய சிறுவன் எலும்பு கூடாக மீட்கப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்