2ஜி வழக்கில் சிறப்பு நீதிபதி சைனி நோக்கமற்ற, தைரியமற்ற தீர்ப்பினை வழங்கினார்; சி.பி.ஐ. குற்றச்சாட்டு

முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ. ராசா தொடர்புடைய 2ஜி வழக்கில் சிறப்பு நீதிபதி வழங்கிய தீர்ப்பு நோக்கமற்றது மற்றும் தைரியமற்றது என சி.பி.ஐ. இன்று குற்றஞ்சாட்டி உள்ளது.

Update: 2018-06-02 09:29 GMT
புதுடெல்லி,

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்தபோது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டுக்கான உரிமங்கள் வழங்கியதில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தின. சுவான் டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியதாக கூறப்பட்டது குறித்து, சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்குகள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன தலைவர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 19 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., யுனிடெக் நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் டி.பி. ரியால்டி தலைவர் ஷாகித் பல்வா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கடந்த டிசம்பர் 21-ந் தேதி தீர்ப்பு கூறினார்.

இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வருடம் மார்ச்சில் சி.பி.ஐ. அமைப்பு சமர்ப்பித்த மனுவில், சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி கடந்த டிசம்பரில் தனது தீர்ப்பினை வெளியிடும்பொழுது, தனது மனதினை அதில் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரது வாக்குமூலங்களையும் கடவுளின் உண்மையான மொழி என எடுத்து கொண்ட தவறினை அவர் செய்துள்ளார்.  கிடைத்த சான்றுகள் மற்றும் நம்பகமிக்க சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை அவர் தவிர்த்து உள்ளார் என்றும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்