வாஸ்து தோஷம் விலக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர்


தினத்தந்தி 16 Aug 2024 3:14 PM IST (Updated: 18 Aug 2024 4:08 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு, அந்த செங்கற்களை எடுத்து செல்கிறார்கள்.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் உணர்த்தும் விதமாக இறைவன் ஓரிடத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் சிறப்புக் குரிய தலம் அக்னீஸ்வரர் ஆலயம். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இங்கு சென்று இறைவனை வணங்கினால் முக்காலத்தையும் உணரும் ஆற்றல் நமக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுந்தரர்

தேவார பாடல் பாடியவர்களில் ஒருவரான சுந்தரர், சிவ பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவருக்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருநாளில் விமரிசையாக விழா எடுப்பது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து அமுதூட்டி வணங்கும் நடைமுறையை தவறாமல் பின்பற்றி வந்தார். இந்த சேவையில் சுந்தரரின் துணைவியார் பரவை நாச்சியாரம்மாளும் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார்.

ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் விழா எடுப்பதில் சிக்கல் உண்டானது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சுந்தரர் ஒவ்வொரு ஆலயமாக சென்று வேண்டினார். இறுதியில் திருப்புகலூர் ஆலயத்திற்கு வந்தடைந்தார். அப்போது அங்கு திருப்பணி நடந்து கொண்டிருந்தது. அதனால் ஆலயத்தின் சுற்றுப்பகுதியில் மணலும், செங்கற்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

வாஸ்து பரிகார தலம்

நெடுந்தூரம் பயணம் செய்து வந்த காரணத்தினால் சுந்தரருக்கு சோர்வு ஏற்பட்டது. கட்டுமான பணிக்கு குவிக்கப்பட்டிருந்த மணலில் படுத்து ஓய்வெடுத்தார். செங்கற்களை தலையணையாக்கிக் கொண்டார். கண் அயர்ந்தாலும் கூட 'மகேஸ்வர பூஜையை எப்படி நடத்துவது?' என்பதிலேயே அவரது சிந்தனை இருந்தது. அவரது கனவில் "பங்குனி உத்திரத்துக்கு காசு எங்கே?" என்று மனைவி கேட்பதுபோல இருந்தது. சட்டென்று கண் விழித்து பார்த்தார். தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்கக்கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு சுந்தரர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இது இறைவனின் லீலை என்று நினைத்து ஆனந்தப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு பின்பு அக்னீஸ்வரர் ஆலயம் வாஸ்து பரிகார தலமாகவும் விளங்க ஆரம்பித்தது. புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு, அந்த செங்கற்களை எடுத்து செல்கிறார்கள். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வட கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.

அக்னி தேவன்

இந்த ஆலயத்திற்கு அக்னீஸ்வரர் என்று பெயர் வர ஒரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஒரு சமயம் அக்னி தேவனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அப்போது அக்னி தேவன் வாயு

தேவனை பார்த்து, "இந்த உலகத்தில் நானே பெரியவன், என்னை எதிர்த்தால் யாராக இருந்தாலும் பொசுக்கி சாம்பலாக்கி விடுவேன். நான், தாக்கத் தொடங்கினால் மலையானாலும் வெடித்து சிதறும்" என்று தற்பெருமை கொண்டார்.

அதற்கு வாயு தேவன், "அக்னியே! நீ எவ்வளவு சக்தி படைத்தவனாக இருந்தாலும்கூட நீ என் மகன்தான். பஞ்ச பூதங்களின் தோற்றத்தில் என்னிடம் இருந்தே நீ தோன்றினாய். ஆதலால் நீ எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் என் ஆற்றலே உன்னிடம் உள்ளது. ஆதலால் நீ என் ஆற்றலுக்கு முன்னே நிற்காது ஒழிவாயாக'' என சாபமிட்டார். தன்னுடைய தந்தையின் சாபத்தை நீக்குவதற்கு என்ன வழி என்று தன் குல குருவாகிய பிரகஸ்பதியிடம் கேட்டார்.

சிவ வழிபாடு

அதற்கு அவரோ, "உன் தந்தையின் சாபம் பொல்லாதது. சோழ நாட்டில் புன்னாக வனம் என்றொரு தலம் இருக்கிறது. அங்கே நீ சென்று நாற்புறமும் அகழியை தோண்டி அங்கு தங்கி இருந்து சிவ நாமம் சொல்லி, சிவ பூஜை செய்து வா. அப்படி செய்தால் எந்த சாபமும் உன்னை அண்டாது" என்று அருளினார்.

அக்னி பகவானும் அவ்வாறே சென்று புன்னாக வனத்தின் நடுவில, சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்து வந்தார். அதில் மனமிரங்கிய சிவபெருமான், லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அக்னி தேவனுக்கு காட்சி கொடுத்தார்.

உடனே அக்னிதேவன் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நான் எதைத் தீண்டினாலும், எதை உண்டாலும் என்னுடைய புனிதத் தன்மை கெடாமல் இருக்க வேண்டும். நீங்கள் இத்தலத்திலும் வீற்றிருந்து உலக மக்களுக்கு அருள் வழங்க வேண்டும்" என்று வேண்டினார். அதன்படியே அக்னிக்கு அருள் புரிந்ததால், இத்தல இறைவன் 'அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் விளங்குகிறது. மேலும் இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள அகழி, 'பாண தீர்த்தம்' என்றும், 'அக்னி தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.

திருமண தடை நீங்கும்

இத்தல இறைவியின் திருநாமம் கருந்தாள் குழலி என்பதாகும். சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்த கால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்களில் இருந்து விடுபடலாம். நிகழ்காலத்தில் நடக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம் என்கிறார்கள்.

சனி தோஷம் விலகும்

சனி தோஷத்தை போக்கும் தலமாகவும் இது அறியப்படுகிறது. இந்த தலத்தில் நள சக்கரவர்த்தியும், சனீஸ்வரனும் ஒரே சன்னிதியில் வீற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். ஒரு சமயம் நள சக்கரவர்த்திக்கு சனி தோஷம் ஏற்பட்டது. அதில் இருந்து விடுபட திருநள்ளாறு செல்வதற்கு முன்பாக இத்தலத்திற்கு வந்து சனீஸ்வரனை வழிபட்டார். அப்போது இறைவன் "திருநள்ளாற்றில் உன்னைப் பிடித்த சனியை விலக்கி கொள்கிறேன்" என அசரீரி வாக்காக கூறினார். அதனால் இங்குள்ள சனீஸ்வரனை 'அனுக்கிரக சனி' என்று அழைக்கிறார்கள். இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்புகலூரில் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 37 கிலோமீட்டர், திருவாரூரில் இருந்து 20 கிலோ மீட்டர், மயிலாடுதுறையில் இருந்து 32 கிலோ மீட்டர், நாகப்பட்டினத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் தூரம் பயணித்து திருப்புகலூரை அடையலாம்.

பாணாசுரனால் உருவான தீர்த்தம்

பாணாசுரன் என்ற அசுரனின் தாய், சிவன் மீது மிகுந்த பற்று கொண்டவர். அதனால் தன்னுடைய தாய் வழிபடுவதற்காக தினமும் பூலோகத்தில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வரும் வழக்கத்தை பாணாசுரன் பின்பற்றினான். ஒருமுறை புகலூருக்கும் வந்தான். இங்கு கோவில் கொண்டுள்ள அக்னீஸ்வரரை பெயர்த்தெடுக்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

பின்பு நான்கு புறமும் அகழி போல் பள்ளம் தோண்டி லிங்கத்தை தூக்க முயன்றான். அவனால் அடித்தளத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவன் பள்ளம் தோன்றிய நான்கு பக்கமும் நீர் ஊற்றெடுத்து தீர்த்தமானது. தனது தவறை உணர்ந்த பாணாசுரன், 'இந்த தீர்த்தம் மக்களின் நோய் தீர்க்கும் மருந்தாகட்டும்' என்று இறைவனிடம் வேண்டினான். பாணாசுரன் ஏற்படுத்திய அகழி தீர்த்தம் என்பதால் 'பாண தீர்த்தம்' என்றும், இந்த தீர்த்தத்தை கொண்டு அக்னி பகவான் சிவனை பூஜித்ததால் 'அக்னி தீர்த்தம்' என்றும் பெயர் பெற்றது.


Next Story