பெண்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் மகளிர் உரிமை திட்டம்


பெண்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் மகளிர் உரிமை திட்டம்
x

மகளிர் உரிமைத்தொகையை கொண்டு சேமிப்பவர்களுக்கு ஒரு சதவீதம் கூடுதலாக அதாவது, 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

சென்னை,

ஒரு காலத்தில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்பட்ட தர்மபுரி மாவட்டம், இப்போது பல திட்டங்களின் பிறப்பிடமாக திகழ்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1989-ம் ஆண்டில் இன்று நாடு முழுவதும் பெண்கள் வாழ்வில் ஒரு பொருளாதார புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவிக்குழு என்ற ஒரு மாபெரும் அமைப்பை நூற்றாண்டு கண்டுகொண்டிருக்கும் மறைந்த கலைஞர் கருணாநிதி தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் இருக்கும் மகளிர், தாய்மார்கள் பொருளாதார சிக்கல் இல்லாமல் தங்கள் சொந்த காலை நம்பி தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்ந்திட வேண்டும், யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த மகளிர் சுயஉதவிக்குழு திட்டம்.

இந்த திட்டத்தின் மூலம் இப்போது தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதில் 51 லட்சத்து 46 ஆயிரம் மகளிர் சேர்ந்து அரசின் கடன் உதவியைப்பெற்று சிறு வியாபாரங்களை தொடங்கி தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அன்று கலைஞர் மகளிருக்காக சுய உதவிக்குழுவை தொடங்கிவைத்த அதே தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்திட்டத்துக்கு விண்ணப்பங்களை பதிவுசெய்யும் முகாமை தொடங்கி வைத்தார். அந்த மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த விழா நடந்தது. இந்த தொப்பூரில் நடந்த ஒரு சம்பவத்தின் எதிரொலியாகத்தான் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த நேரத்தில், சமூகநலத்துறை அமைச்சர் இந்திரகுமாரி அறிவித்தார். அந்த திட்டம் இப்போது கருணைமிக்க திட்டமாக ஜெயலலிதா பெயர் சொல்லும் திட்டமாக திகழ்ந்து வருகிறது.

தொப்பூரில் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த மகளிர் உரிமை தொகைத்திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்களுக்கு 'தைபிறந்தால் வழி பிறக்கும்' என்பது போல மாதம் பிறந்தால் 'டாணென்று' ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கில் போய் சேர்ந்துவிடுகிறது. இந்த தொகை அந்த மகளிருக்கு பேருதவியாக இருக்கிறது. அவர்களின் மாதச்செலவில் முக்கிய செலவினங்களுக்காக இது கைக்கொடுத்தாலும், ஏராளமான பெண்கள் இந்த ஆயிரம் ரூபாயையும் முழுமையாக செலவழிக்காமல் அதில் மிச்சம்பிடித்து சேமித்து வைக்கிறார்கள்.

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தமயந்தி என்ற இல்லத்தரசி மகளிர் உரிமைத்தொகை மூலம், தான் வாங்கும் ஆயிரம் ரூபாயை அப்படியே தன் மகளுக்காக தபால்அலுவலகத்தில் செல்வமகள் திட்டத்தில் சேமித்து வைப்பதாக கூறுகிறார். 8 லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் இந்த தொகையை பெறுவதற்காக கணக்கு வைத்திருக்கிறார்கள். அதில் 38 ஆயிரத்து 420 பேர் மாதம் ரூ.100 முதல் ரூ.500 வரை தமிழ் மகள் திட்டத்தின் கீழ் 'ரெக்கரிங் டெபாசிட்'டுகளில் (தொடர் வைப்புத்தொகை) சேமித்து வைக்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளில் 'ரெக்கரிங் டெபாசிட்டு'க்காக மற்றவர்களுக்கு 7 சதவீதம் வட்டி கொடுக்கும் நிலையில் மகளிர் உரிமைத்தொகையை கொண்டு சேமிப்பவர்களுக்கு ஒரு சதவீதம் கூடுதலாக அதாவது, 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

மற்ற வங்கிகளிலும் இதுபோல மகளிர் உரிமைத்தொகைக்காக சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் பெண்கள் முழுத்தொகையையும் எடுக்காமல் சேமிக்கிறார்கள். ஆக மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வாழ்வில் 'நாளை நமதே' என்று சொல்லும் வகையில் எதிர்கால வாழ்வுக்கான மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சிக்கனமாக வாழ்ந்து சேமிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது.


Next Story