6-வது முறையாக அரியணை ஏறுவாரா நவீன் பட்நாயக்?


6-வது முறையாக அரியணை ஏறுவாரா நவீன் பட்நாயக்?
x

ஒடிசாவில் ஒரு தமிழர் கோலோச்சி கொண்டு இருப்பதை அங்குள்ள மக்களும் வரவேற்கின்றனர்.

சென்னை,

ஒரிசா என்று பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு, இப்போது ஒடிசா என்று அழைக்கப்படும் மாநிலம் தமிழ்நாட்டோடு பல நூற்றாண்டுகளாக அரசியல், கலாசாரம், ஆன்மிக தொடர்புடையது. ஒடிசா அரசியலில் கோலோச்சி வந்த பிஜூ பட்நாயக், தமிழகத்தின் அரசியல் தலைவர்களான எம்.ஜி.ஆர். - கருணாநிதி ஆகியோருடன் ஒருசேர நட்பு பாராட்டி வந்தார். இந்த நட்போடு அவர் நிற்காமல், தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை காண விரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி, மத்திய மந்திரியாக இருந்த பிஜூ பட்நாயக் சென்னைக்கு வந்து அ.தி.மு.க. - தி.மு.க.வை இணைக்க பெரும் முயற்சி எடுத்தார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் ஒருசேர அழைத்து பேசினார். பின்னர் எம்.ஜி.ஆர்., கருணாநிதி இருவரையும் தனித்தனியாக பேசவும் வைத்தார். இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தாலும், வெற்றி பெறவில்லை. அந்த ஒரு நாள் பேச்சோடு, இந்த இணைப்பு முயற்சி தொடக்கத்திலேயே கருகிப் போய்விட்டது.

1990-ம் ஆண்டு ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பிஜூ பட்நாயக் முதல்-மந்திரியானார். 1997-ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தவுடன் அவரது மகனான நவீன் பட்நாயக், ஜனதாதள கட்சியில் இருந்து பிரிந்து தனது தந்தையின் பெயரில் பிஜூ ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி, கடந்த 2000-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்-மந்திரியானார். அன்றிலிருந்து தொடர்ந்து, அங்கு நடந்த 5 தேர்தலிலும் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். மக்களிடம் அளப்பரிய செல்வாக்கைப் பெற்றுள்ள நவீன் பட்நாயக், இப்போது 6-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் களத்தில் உள்ளார். ஒடிசாவில் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பிஜூ ஜனதாதளம், மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் 2 கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன.

நவீன் பட்நாயக், 6-வது முறையாகத் தொடர்ந்து முதல்-மந்திரியாக அரியணை ஏறினால், அது மேற்கு வங்க முதல்-மந்திரியாக இருந்த ஜோதிபாசுவின் 5 முறை தொடர் முதல்-மந்திரி என்ற சாதனையை முறியடித்து விடுவார். நவீன் பட்நாயக் தொடர் வெற்றிக்கு, அவரது செல்லப்பிள்ளையாக வலம்வரும் மதுரை மேலூரை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியனின் பங்கு அளப்பரியது என்று அரசியல் அரங்கில் பேசப்படுகிறது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தள கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பார்க்கப்படுகிறார்.

தற்போது பிஜூ ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர்களை தேர்வு செய்ததில் முக்கிய பங்கு வி.கே.பாண்டியனுடையது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதேபோல், ஒடிசாவில் ஒரு தமிழர் கோலோச்சி கொண்டு இருப்பதை அங்குள்ள மக்களும் வரவேற்கின்றனர். இது தமிழர்களான நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.


Next Story