கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதில் தமிழகத்துக்கு முதல் இடம்


கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதில் தமிழகத்துக்கு முதல் இடம்
x

மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கும் பெரும் பொறுப்பு மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு இருக்கிறது.

மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கும் பெரும் பொறுப்பு மத்திய - மாநில அரசாங்கங்களுக்கு இருக்கிறது. இதில் குடிநீர் வசதி என்பது, ஒவ்வொருவரும் உயிர் வாழ்வதற்கு ஜீவநாடியாக இருக்கிறது. காற்று, நீர், உணவு இல்லாமல் எவரும் உயிர்வாழ முடியாது. இதில் காற்று என்பதை அரசாங்கம் தர முடியாது. இயற்கைதான் தரவேண்டும். அதுபோல தண்ணீரும் இயற்கையின் அருட்கொடை என்றாலும், அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும்.

அந்த வகையில்தான் மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கு மத்திய - மாநில பட்ஜெட்டுகளில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆரம்ப கால கட்டங்களில், அனைத்து ஊர்களுக்கும், அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் தொட்டிகள் கட்டி, தெருக்களில் குழாய் இணைப்புகள் அமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது, அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குவதே அரசின் லட்சியமாக இருந்தது. தொடர்ந்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன.

இதில், குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிக அளவில் இணைப்புகள் வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்குவதற்கு வகை செய்யும் ஜல் ஜீவன் மிஷன் என்று கூறப்படும் உயிர் நீர் இயக்கம் என்ற திட்டத்தை அறிவித்தார். 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கி முடிக்கவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்காகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 55 லிட்டர் குடிநீராவது வழங்கப்படவேண்டும் என்பதுதான், குறிக்கோளாக இருக்கிறது.

அப்போது 37 சதவீத வீடுகளில் இத்தகைய குடிநீர் குழாய் இணைப்புகள் இருந்தன. இப்போது கணக்கெடுத்ததில், கிராமப்புறங்களில் உள்ள 53 சதவீத வீடுகள், அதாவது 10 கோடியே 20 லட்சம் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் இருக்கின்றன. பல மாநிலங்களில் மிக குறைவான கிராமப்புற குடியிருப்பு வீடுகளுக்கே குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 60 சதவீதத்துக்கு குறைவான குழாய் இணைப்புகளை கொண்ட மாநிலங்களில், இந்த திட்ட செயல்பாடுகள் மூலம் மிகச் சிறப்பாக செயல்பட்ட முதல் மாநிலம் என்று தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து அதற்கான விருதை டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, அதை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார். இந்த விருதைப்பெற்றதன் மூலம் தமிழக அரசுக்கு மிகப்பெரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டமிடுதலும், இந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை நிறைவேற்ற அவர் வழங்கிய ஆலோசனைகளுமே இந்த விருதை பெறுவதற்கு அடித்தளம் என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. தமிழ்நாட்டில் இதுவரை கிராமப்பகுதிகளில் உள்ள மொத்தம் ஒரு கோடியே 24 லட்சத்து 93 ஆயிரம் வீடுகளில், 69 லட்சத்து 14 ஆயிரம் வீடுகளுக்கு, அதாவது 55 சதவீத வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 55 லட்சத்து 79 ஆயிரம் வீடுகளுக்கு வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 80 சதவீதத்துக்கு மேற்பட்ட வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் இருக்கின்றன என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்குவது மட்டும் போதாது, தினமும் குடிநீர் சப்ளை இருக்கவேண்டும், அதற்கான நீர் ஆதாரங்கள் புதிது புதிதாக உருவாக்கப்படவேண்டும், இப்போதும் பல ஊர்களில் தினமும் குடிநீர் வராதநிலை இருக்கிறது. அவைகளெல்லாம் சரி செய்யப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story