ஒரு பக்கம் இலங்கை கடற்படை; மற்றொரு பக்கம் கொள்ளையர்கள்!


Sri Lanka Navy on one side; Bandits on the other side!
x

2009-ம் ஆண்டுவரை கடலில் எந்த தொல்லையும் இல்லாமல் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், அதற்கு பிறகு அச்சத்துடனேயே மீன்பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் 1,076 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட கடற்கரை இருக்கிறது. இந்த கடலோரத்தில் 14 மாவட்டங்கள் இருக்கின்றன. அதில் 608 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் 10 லட்சத்து 48 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் கடல்தான். அவர்களுக்கு கடலில் உள்ள மீன்களை பிடிப்பதைத்தவிர வேறு தொழில் தெரியாது. "தரை மேல் பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான், கரை மேல் இருக்க வைத்தான், பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்" என்று 'படகோட்டி' படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்தான் அவர்களின் வாழ்வியல் தத்துவம்.

2009-ம் ஆண்டுவரை கடலில் எந்த தொல்லையும் இல்லாமல் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள், அதற்கு பிறகு அச்சத்துடனேயே மீன்பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்போதெல்லாம் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் இயற்கை சீற்றங்களைக்கண்டு அஞ்சுவதற்கு பதிலாக, "எங்கே இலங்கை கடற்படை நம்மை பிடித்துக்கொண்டுபோய் விடுவார்களோ?" என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நிமிடத்தையும் கழிக்க வேண்டியநிலை இருக்கிறது. கைது செய்வது மட்டுமல்லாமல், மீன்பிடி வலைகளோடு படகுகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கை சிறையில் அடைத்துவிடுகிறார்கள்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன் கரையில் இருக்கும் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுகிறது. அவர்களின் குடும்பங்களும் நிர்க்கதியாக இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோருகிறார். மத்திய அரசாங்கமும் தன் ராஜ்ஜிய உறவுகளை பயன்படுத்தி, மீனவர்களை விடுதலை செய்ய வைக்கிறது. ஆனால், படகுகளை மட்டும் இலங்கை அரசாங்கம் கொடுக்க மறுக்கிறது. தற்சமயம் இலங்கை சிறையில் 134 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 187 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடைசியாக கடந்த 7-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் கைது படலம் அதிகரிப்பதற்கு இலங்கை தேர்தல் காரணமாக சொல்லப்படுகிறது. விரைவில் அங்கு தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், வடகிழக்கு மாகாணத்திலுள்ள இலங்கை மீனவர்களின் ஓட்டுகளை குறிவைத்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு வேட்டையாடி வருகிறது என்ற பேச்சு மீனவர்கள் மத்தியில் இருக்கிறது.

இப்போது புது தலைவலியாக இலங்கை கடற்கொள்ளையர்களும் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை தாக்கி, மீன்கள், வலைகளை எடுத்துச்செல்வதுடன், படகின் என்ஜின், ஜி.பி.எஸ். கருவி, செல்போன், வாக்கி-டாக்கி என்று ஒன்றையும் விடாமல் எடுத்துச்சென்று விடுகிறார்கள். கடந்த மாதம் 26-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூர் கிராமத்தை சேர்ந்த 3 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, 3 படகுகளில் வந்த 9 கடற்கொள்ளையர்கள் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டுபோய்விட்டார்கள். அதற்கு பிறகும் ஓரிரு சம்பவங்கள் அப்படி நடந்துள்ளன.

ஆக, இப்போது கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், கடலுக்குள் எங்கே மீன் இருக்கிறது என்பதைக்கூட பார்க்காமல், எங்கே இலங்கை கடற்படை வந்துவிடுமோ?, கடற்கொள்ளையர்கள் வந்து தாக்குவார்களோ? என்ற அச்சத்துடனேயே பொழுதை கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. எனவே, மத்திய அரசாங்கம் உடனடியாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story