இடைக்கால பட்ஜெட்டில் சாதனை பட்டியல்!


இடைக்கால பட்ஜெட்டில் சாதனை பட்டியல்!
x

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 56 நிமிடங்கள் இந்த உரையை அவர் வாசித்தார். மரபுப்படி, இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுவது இல்லையென்றாலும், அடுத்த 3 மாதங்களில் 18-வது மக்களவைக்கான தேர்தல் வர இருப்பதால், ஜனரஞ்சக அறிவிப்புகள் நிறைய இருக்கும் என மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தநிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவில் புதிய அறிவிப்புகள் இல்லை.

நடுத்தர மக்கள் வருமான வரி சலுகைகளை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு, நேர்முக வரியிலோ, மறைமுக வரியிலோ எந்த மாற்றமும் இல்லை என்று கூறிவிட்டார்.

இதுபோல், பி.எம்.கிசான் என்ற பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக வழங்குவது, 4 தவணைகளாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என்று நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அது பற்றிய அறிவிப்பும் இல்லாதது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால், இந்த இடைக்கால பட்ஜெட்டை தேர்தலுக்கு பயன்படும் வகையில், தங்கள் அரசின் சாதனை பட்டியலை தாக்கல் செய்யும் வாய்ப்பாகவே நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பயன்படுத்திக்கொண்டார். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் கடந்த 10 ஆண்டு சாதனைகளை அவர் பட்டியலிட்டார். "யாருக்கு என்ன தேவை என்று பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு உரிய முன்னுரிமை கொடுத்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகள், ஏழைகளுக்கு மக்கள் நல திட்டங்கள் மூலமாக ரூ.34 லட்சம் கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்று பெருமைபட கூறினார்.

"சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மூலம் ஒரு கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்கியிருக்கிறோம். மகளிர் தொழில்முனைவோருக்கு 30 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 2 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும்" என்ற சாதனைகளை வெளியிட்டார். தனிநபர் சராசரி வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறினார். ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைப்பதன் மூலமாக அந்த வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்பதை தெரிவித்தார். தன் பேச்சின் தொடக்கத்தில் அவர், இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமான வளர்ச்சியைக்கண்டுள்ளது என்று கூறியதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வளர்ச்சி இருக்கும் என்று உறுதிபட தெரிவித்து பெரிய நம்பிக்கையை வெளிக்காட்டினார்.

பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி நிர்வாக திறமையையும் எடுத்துக்கூறியுள்ளார். தங்கள் அரசின் சாதனைகளை கூறிய அவர், "மீண்டும் மக்கள் எங்களை அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுப்பார்கள்" என்று தங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை முழக்கமாகவே தெரிவித்துள்ளார்.


Next Story