இதில் மத்திய அரசாங்கத்துக்குத்தான் உரிமை இருக்கிறது
குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்து, அதற்கான விதிமுறைகளையும் 39 பக்கங்களில் வெளியிட்டது.
இந்தியா முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்படும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியதுதான். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அண்டை நாடுகளில் மதரீதியாக சிறுபான்மையினராக இருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்டது.
இந்த சட்டத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியாக அடக்குமுறைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகி 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம்புகுந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பலனை மற்ற மதத்தினர் அடையும்போது, அங்கிருந்துவரும் முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தின் பலனை வழங்காதது ஏன்? என சட்டம் நிறைவேற்றப்பட்டப்போதே கேள்விகள் எழுந்தன. அதற்கு இந்த நாடுகளெல்லாம் முஸ்லிம் நாடுகள், அங்கு முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, ஆகவே முஸ்லிம் மதத்தினர் இந்த சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசாங்கம் விளக்கம் அளித்தது. ஆனால் அதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை, போராட்டங்களும் வெடித்தன. இந்த போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசாங்கம் இந்த சட்டத்தை கடந்த 4 ஆண்டுகளாக நிறைவேற்றுவதற்குரிய அறிவிப்பாணையை வெளியிடவில்லை. இப்போது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில், உடனடியாக சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்து, அதற்கான விதிமுறைகளையும் 39 பக்கங்களில் வெளியிட்டது. இந்த சட்டத்துக்கு கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. கேரளாவில் இதை நிறைவேற்றப்போவதில்லை என முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.
தமிழ்நாட்டிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கத்திலிருந்தே இந்த சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழக சட்டசபையிலும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை திரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட அரசு இடமளிக்காது என்று திட்டவட்டமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரகடனப்படுத்திவிட்டார்.
இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை. இந்திய குடியுரிமை கொடுக்கும் உரிமை முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்துக்கே உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொறுப்பு மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தபால்துறை, மக்கள் கணக்கெடுப்புத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்பவரின் பின்னணி மற்றும் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளும் பணி மத்திய உளவுப்பிரிவான ஐ.பி.க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுக்கோ, உள்ளூர் போலீசுக்கோ பெரிய அளவில் எந்த கடமையும் இல்லை என மூத்த உள்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்காக இறுதி முடிவெடுக்க ஒவ்வொரு மாநிலத்திலும் கணக்கெடுப்பு இயக்குனர் தலைமையில் அமைக்கப்படும் மத்திய அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழுவில், மாநில அரசு உள்துறை அதிகாரி அழைப்பாளராக கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இது முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் அதிகார எல்லைக்குள்தான் வருகிறது.