மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் !


மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் !
x

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ‘முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

பண்டைய காலத்தில் இருந்தே தமிழ் சமுதாயம் விவசாயத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. விவசாயிகளை மிக உச்சத்தில் வைக்கும் விதமாகத்தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று போற்றி புகழ்ந்து இருக்கிறது. விவசாய நிலத்தையும் பெற்ற தாய்க்கு நிகராக கருதுகிறார்கள். இன்றும் கிராமங்களில் வயல் வரப்புகளில் யாரும் செருப்பு போட்டு நடக்க மாட்டார்கள். கைத்தடி வைத்து நடக்கும் பெரியவர்கள், வரப்பில் நடக்கும்போது கைத்தடியை ஊன்றி நடக்கமாட்டார்கள்.

அய்யன் வள்ளுவர் கூட, திருக்குறளில் விவசாயத்துக்கு என தனி குறட்பாக்களை எழுதியுள்ளார். அல்லும் பகலும் அயராது உழைத்து உலகோரின் அச்சாணியாக திகழும் விவசாயிகளுக்கு தெய்வ பூமி என்றால் அது அவர்கள் சாகுபடி செய்யும் விளை நிலம்தான். அந்த விளை நிலங்களில் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டுமென்றால், மண் வளம் நன்றாக இருக்க வேண்டும். வேளாண்மைக்கு மண்ணே ஆதாரம். பயிர் வளர்ச்சிக்கு அடிப்படை மண்தான். பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதும் மண்தான். பயிர்களின் மகசூல் மண் வளத்தை பொருத்தே கிடைக்கிறது. நாளடைவில் ஒரே பயிர்களை சாகுபடி செய்வதாலும் மண்ணில் இருந்து சத்துக்களை அதிகம் உறிஞ்சும் பயிர்களை சாகுபடி செய்வதாலும் அதிக அளவில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் மண்ணிலுள்ள நுண்ணுயிர் குறைந்து மண் வளம் குறைந்துவிடுகிறது.

இந்த நிலையில், மண் வளத்தை மேம்படுத்துவதற்காக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ரூ,206 கோடி செலவில், 'முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற ஒரு புதுமையான திட்டத்தை விவசாயத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் 4 ஆயிரம் டன் பசுந்தாள் உர விதை வினியோகம் செய்யப்படும். இந்த பசுந்தாள் உர விதையை விதைத்தால், அந்த பசுந்தாள் பயிர்கள் விதைப்புக்கு முன் விவசாய நிலத்தில் வளர்ந்து அந்த மண்ணிலேயே மக்கி நல்லதொரு உரச்சத்தாக மாறி, அடுத்து பயிரிடும் பயிர்களுக்கு அனைத்து சத்துக்களையும் வழங்கும். இதன் மூலம் மண்ணில் வாழும் நுண்ணுயிர் பாதுகாக்கப்பட்டு மண் வளம் பெருகும்.

மண்ணில் கரிம கார்பன் உள்ளிட்ட அனைத்து சத்துக்களும் சரிவிகிதத்தில் இருந்தால் மட்டுமே நுண்ணுயிர் பல்கிப் பெருகி பயிர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைத்து மகசூல் அதிகரிக்கும். அதற்கு இந்த பசுந்தாள் உரம் பெரிதும் துணை நிற்கும். நமது மூதாதையர்கள் இந்த பசுந்தாள் உர முறையை பயன்படுத்தித்தான் தங்கள் சாகுபடியை செய்தார்கள். நமது பழைய விவசாய முறைக்கு இப்போது இந்த திட்டத்தின் மூலம் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து இயற்கை உரத்துக்காக மண் புழு குழிகள் உருவாக்கவும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமில மண் கொண்ட நிலத்தை சீர்செய்து விவசாயம் செய்யும் வகையில் மாற்றியமைக்க இந்த திட்டத்தில் இடம் இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் 2 லட்சம் விவசாயிகளுக்கு, அவர்கள் நிலத்தில் உள்ள மண் வளத்தை அறிந்து அதற்கேற்ற பயிர்களை சாகுபடி செய்ய உதவும் வகையில், அவர்களுக்கு மண் வள அட்டை வழங்குவதற்கும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோல, விவசாயத்தை மேம்படுத்த 22 புதிய செயல்முறைகளை உள்ளடக்கியதாக இந்த புதிய திட்டம் இருக்கிறது. விவசாயிகள் வாழ்வில் இந்த திட்டம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.


Next Story