நீதி வென்றது


நீதி வென்றது
x

சண்டிகார் மேயர் தேர்தல் நடந்தபோது கண்ணெதிரே நடந்த முறைகேட்டை பார்த்து நீதி தேவதை கண்ணை மூடிவிடவில்லை.

சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தலில் நடந்த முறைகேட்டுக்கு ஒரு சரியான தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு வழங்கி, 'நீதி என்றும் சாகாது' என்பதை நிரூபித்துவிட்டது. சண்டிகார் மேயர் தேர்தல் நடந்தபோது கண்ணெதிரே நடந்த முறைகேட்டை பார்த்து நீதி தேவதை கண்ணை மூடிவிடவில்லை. இந்த நகரில் உள்ள மாநகராட்சிக்கு 35 உறுப்பினர்கள் உண்டு. மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் இந்த 35 உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல், அந்த நகர எல்லையில் வரும் மக்களவை உறுப்பினருக்கும் வாக்குரிமை உண்டு. கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி இந்த மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சி மன்றத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு13 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு7 உறுப்பினர்களும், பா.ஜனதா கட்சிக்கு14 உறுப்பினர்களும், அகாலி தளம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் இருக்கிறார்கள்.

இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குல்தீப் குமாரும், பா.ஜனதா சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 35 உறுப்பினர்களில், ஆம் ஆத்மிக்கு 13 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும் என 20 உறுப்பினர்கள் இருப்பதால் பெரும்பான்மை ஓட்டுகளை பெறும், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப்குமார்தான் வெற்றிபெறுவார் என்பது கூட்டல் கணக்கு அறிந்த எல்லோருக்கும் தெளிவாக தெரிந்த உண்மையாகும். ஆனால் வாக்குகளை எண்ணி முடிவை அறிவித்த தேர்தல் அதிகாரி அனில் மாசிக், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவான 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு, 16 வாக்குகளை பெற்றபா.ஜனதா வேட்பாளரை வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டார்.

இந்த ஜனநாயக முறைகேட்டை கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. இந்த தேர்தல் முடிவை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்குப்போடப்பட்டது. ஆனால் அந்த நீதிமன்றம் 3 வாரங்களுக்குபின் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறிவிட்டது. உடனடியாக ஆம் ஆத்மி கட்சி, சுப்ரீம்கோர்ட்டின் கதவை தட்டியது. அங்கு நீதியின் வாசல் உடனடியாக திறந்துவிட்டது. தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கையில், வாக்குகளை எண்ணும்போது எடுத்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை நீதிபதிகள் பார்த்தனர். அப்போது தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்த வாக்குச்சீட்டுகளில் அவரே ஏதோ கிறுக்கிவிட்டதை பார்த்து நீதிபதிகள் திடுக்கிட்டனர்.

தேர்தல் அதிகாரியே பேனாவால் கிறுக்கிவிட்டு, அந்த வாக்குச்சீட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை ரத்துசெய்துவிட்டு, அந்த 8 வாக்குகளும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக அறிவித்து, அவரே மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் இந்த செயலை சகிக்கவே முடியாது, தேர்தல் அதிகாரி மீது குற்றவியல் சட்டத்தின் 340-வது பிரிவின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். நீதிமன்றம் என்பது நீதியின் கோவில், அங்கு நீதி பரிபாலனை செய்யும் நீதிபதிகள் நீதி தேவதைகள் என்பது போல இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பால் நீதி வென்றிருக்கிறது.

இதுபோன்ற தீர்ப்புகள் நீதி ஒருபோதும் சாகாது, நீதிமன்றங்களுக்கு சென்றால் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கும். மொத்தத்தில் இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளைப்பார்த்து தலைவணங்கி நாட்டு மக்கள் நன்றி சொல்கிறார்கள்.


Next Story