சிறப்பு அந்தஸ்து சாத்தியமாகுமா?


Is special status possible?
x

சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்து வருகின்றனர்.

சென்னை,

கடந்த இரு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தபா ஜனதா நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பா ஜனதா 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசத்தின் 16 இடங்களும், பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் 12 இடங்களும் பா.ஜனதாவுக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுத்தது.

தொடக்கத்தில் இருந்தே சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சிறப்பு அந்தஸ்து என்றால், விசேஷமான கூடுதல் நிதிகள் மற்றும் மானியங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும். எடுத்துக்காட்டாக மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களில் இப்போது மத்திய அரசாங்கமும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் செலவுகளை பங்கிட்டுக்கொள்கின்றன. சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் இந்த பங்கீடு 90:10 என்ற விகிதத்தில் இருக்கும். இதுதவிர சிறப்பு அந்தஸ்து பெறும் மாநிலங்களுக்கு வரியிலும் சிறப்பு சலுகைகள் இருக்கும். இதுமட்டுமல்லாமல், மத்திய அரசு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் அந்த ஆண்டு செலவழிக்கப்படாத தொகை இப்போது திரும்ப வாங்கிக்கொள்ளப்படும். சிறப்பு அந்தஸ்து பெறும் மாநிலங்களில் இந்த தொகையை அடுத்த ஆண்டு கூடுதலாக செலவழிக்கலாம்.

பொதுவாக சிறப்பு அந்தஸ்து கொடுக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள மாநிலங்கள், மக்கள்தொகை அடர்த்தி குறைந்த மாநிலங்கள், மலைவாழ் மக்கள் அதிகமாக உள்ள மாநிலங்கள், அண்டை நாடுகளின் எல்லைப்பகுதிகளில் உள்ள மாநிலங்கள், பொருளாதார கட்டமைப்பில் பின்தங்கிய மாநிலங்களுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த தகுதியின் அடிப்படையில் தற்போது ஜம்மு காஷ்மீர், அசாம், நாகாலாந்து, இமாசலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், மிசோரம், திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இப்போது பீகார், தாங்கள் எடுத்த சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமையில் இருப்பதாக கூறியிருக்கிறது. அடுத்து ஆந்திரா, தங்கள் மாநில பிரிப்பின் மூலம் தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்கு போய்விட்டதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, இந்த இரு மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோருகிறார்கள். ஆனால் 14-வது நிதிக்குழு எந்த மாநிலத்துக்கும் இனி சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என்று பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தும் பட்சத்தில், வருவாய் இழப்பு சரிசெய்யப்பட்டு விடுகிறது என்றும் கூறியுள்ளது.

இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் இப்போது சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், ஏற்கனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தும் ஒடிசா உள்பட மற்ற மாநிலங்களும் சிறப்பு அந்தஸ்து கோரும்நிலை கண்டிப்பாக ஏற்படும். சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதற்கு முக்கிய அடிப்படையாக வைத்த இந்த கோரிக்கையை ஏற்பது என்பது பா ஜனதா கூட்டணி அரசாங்கத்துக்கு பெரிய சவாலாக இருக்கும். என்ன நடக்கப்போகிறது? என்பது அடுத்த சில நாட்களில் தெரியும். அதைத்தான் நாடும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.


Next Story