மக்கள் தொகையில் அடுத்த ஆண்டு இந்தியா முதலிடம்
உலக மக்கள் தொகை எண்ணிக்கை 800 கோடியை எட்டியது. இதில் அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 17 கோடியே 70 லட்சம் பேர் இணைந்துள்ளனர்..
மக்கள் இல்லாமல் உலகம் இல்லை. கடந்த 15-ந்தேதி பிறந்த ஒரு குழந்தை உலகின் மக்கள்தொகையை 800 கோடியாக்கிவிட்டது. அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள் 800 கோடியை தாண்டிச்செல்ல வைத்துவிட்டது. 1805-ம் ஆண்டு 100 கோடியாக இருந்த உலகின் மக்கள்தொகை 1925-ல் தான் 200 கோடியானது. அதாவது மக்கள்தொகை இருமடங்காக 120 ஆண்டுகள் ஆனது. ஆனால் 1975-ல் 400 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை 47 ஆண்டுகளில் இருமடங்காகி 800 கோடியாகிவிட்டது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் உலக மக்கள்தொகையில் 100 கோடி பேர் இணைந்துள்ளனர்.
இதில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 17 கோடியே 70 லட்சம் பேர். அடுத்த இருமடங்கு நடக்கப்போவதில்லை என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் இனி குழந்தை பிறப்பு குறையும். ஆனால் மக்களின் ஆயுட்காலம் குழந்தை பிறப்பு விகிதத்தை விட அதிகமாகும் என்றும் கூறியுள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட உலக மக்கள்தொகை கணக்குப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா 142 கோடியே 60 லட்சம் மக்கள் தொகையோடு இருக்கிறது. அடுத்து இந்தியா 141 கோடியே 70 லட்சத்தில் இருக்கிறது. 33 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையோடு அமெரிக்கா 3-ம் இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தி முதல் இடத்துக்கு சென்றுவிடும்.
தற்போது இந்திய மக்கள் தொகையில் 15 வயதில் இருந்து 64 வயது வரை உள்ளவர்கள் 68 சதவீதம் உள்ளனர். 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 7 சதவீதம் பேர் உள்ளனர். மற்றொரு மதிப்பீடு உலகின் சராசரி வயது 30.3 ஆண்டாக இருக்கும் நிலையில் இந்தியாவின் சராசரி வயது 28.7 ஆண்டுகளாகும். ஆனால் சீனாவின் சராசரி வயது 38.4 வயதாகும். இந்தியாவில் இப்போது சராசரி கருவுறுதல் விகிதம் அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளின் சராசரி 2.2 லிருந்து 2 ஆக குறைந்துவிட்டது. ஆக, மக்கள்தொகை வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நவீன குடும்ப கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவதே இதற்கு காரணம்.
மக்கள் தொகை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. நாட்டில் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சியை மத்திய - மாநில அரசுகள் பெருக்கும்போது உழைக்கும் கரங்கள் வேண்டும். அதற்கு இந்தியாவில் பஞ்சம் இருக்காது. அதற்குரிய வேலைவாய்ப்புகளை பெருக்குவது அரசுகளின் பொறுப்பாகும். ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வேண்டும். பரந்து விரிந்து நிறைய நிலப்பரப்பு உள்ள இந்தியாவில் நிறைய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், விவசாய நிலப்பரப்பை அதிகரிக்கவும் நிலத்துக்கு பஞ்சமே இல்லை.
தொழில் உற்பத்தி, விவசாய உற்பத்தியை பெருக்க திட்டமிட்டால் அதற்கு துணையாக வேலை செய்ய ஆள் வேண்டும் என்ற வகையில் அந்த வயதுள்ளவர்கள் 68 சதவீதம் பேர் இருப்பது மிகவும் நம்பிக்கை தருவதாகும். இவ்வளவு மக்கள் தொகைக்கும் தேவையான உணவு, வீட்டு வசதி, கல்விவசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்கான திட்டமிடுதலும், செயலாக்கமும் மத்திய-மாநில அரசுகளின் கடமையாக இருக்கிறது.