அரசு மரியாதை!
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று பன்னெடுங்காலமாக கூறிவந்தார்கள். அவ்வாறு தானம் செய்வது சிறந்த புண்ணியமாக கருதப்பட்டது.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று பன்னெடுங்காலமாக கூறிவந்தார்கள். அவ்வாறு தானம் செய்வது சிறந்த புண்ணியமாக கருதப்பட்டது. ஆனால், மருத்துவத் துறை வளர்ச்சி அடைந்த பிறகு, எல்லா தானங்களிலும் சிறந்த தானம் உடல் உறுப்பு தானம்தான் என்று கூறப்படுகிறது.
இப்போது, இதயம், நுரையீரல், சிறுநீரகம், ஈரல், கணையம், கண்விழிபடலம், எலும்பு, தோல் என்று முக்கியமான உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டாலும், தானம் வழங்கியவர்களின் உடல்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய எந்தத் தடையும் இருக்காது. அவர்களுடைய தானம் செய்யப்படும் உறுப்புகள் பல உயிர்களை வாழவைக்கும். இந்த உடல் உறுப்பு தானம் என்ற புனிதமான சேவை 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந்தேதிதான் தமிழ்நாட்டில் வெளியே தெரியத்தொடங்கியது. டாக்டர் தம்பதிகளான அசோகன்-புஷ்பாஞ்சலி ஆகியோரின் 15 வயது மகன் ஹிதேந்திரன், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, மூளைச் சாவு அடைந்த நிலையில், துக்கத்திலும் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து பலரின் மறுவாழ்வுக்கு வழிவகுத்து கொடுத்தனர். ஹிதேந்திரன் இறவா புகழோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது மகனின் இழப்பினால் துயருற்று இருந்த நேரத்திலும் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்த அந்த தியாக பெற்றோரை அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி நேரில் அழைத்து நெஞ்சுருக பாராட்டினார்.
தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 3-ந்தேதி உறுப்பு தான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஹிதேந்திரனின் நினைவாக, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட செப்டம்பர் 23-ந்தேதிதான் உறுப்பு மாற்று தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று தொடங்கி இன்றுவரை பல நல்ல உள்ளங்கள், எதிர்பாராத விதமாக தங்கள் குடும்ப உறுப்பினர்கள் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த நேரத்தில், மிகுந்த மனிதாபிமானத்தோடு, இரக்கத்தோடு இன்னொரு உயிர் மறுவாழ்வு பெறட்டும் என்ற உணர்வில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், ஈரல், கணையம், கண்விழிபடலம், எலும்பு, தோல் போன்றவற்றை வழங்கியதன் மூலம் 1,730 பேரிடம் இருந்து உறுப்பு கொடை பெறப்பட்டு, மாற்று உறுப்புக்காக காத்திருந்த 6,327 பேருக்கு மேல் பொருத்தப்பட்டு, அவர்கள் மறுபிறவி பெற்றுள்ளனர்.
உறுப்பு தானம் வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமது உறுப்புகளை தந்து, பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றும் வகையில், "இறக்கும் முன் உறுப்புதானம் செய்தோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே தேனியில் உடல் உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அதற்கு அடுத்த 2 நாளில் திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்தவர் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேருவும் இறுதி மரியாதை செலுத்தினர். முதல்-அமைச்சர் அறிவித்த பிறகு 10 நாட்களில் மட்டும் 1,616 பேர் தாங்கள் இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் செய்வதாக எழுதிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தியாகத்துக்கு அரசு மரியாதை என்பது, போற்றப்பட வேண்டிய அந்த தியாக செம்மல்களுக்கு செலுத்த வேண்டிய உரிய அங்கீகாரமாகும். உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை இன்னும் அதிகமாக மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்.