மூத்த குடிமக்களுக்கு சலுகை இல்லையா?


மூத்த குடிமக்களுக்கு சலுகை இல்லையா?
x

ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மீண்டும் கட்டண சலுகையாக வழங்கவேண்டும்.

சமுதாயத்தில் மூத்த குடிமக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி தாங்கிப்பிடிப்பது, கட்டாயமான தார்மீக கடமையாகும். தமிழக அரசும் பல ஆண்டுகளாக மூத்த குடிமக்களுக்கு பென்சன் போன்ற பல உதவிகளை வழங்கிவருகிறது. வயது முதிர்ந்த நிலையில், அனைவருமே அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்சன் வாங்குபவர்கள் அல்ல. பெரும்பாலானோர் இளமை காலத்தில் சம்பாதித்து, ஏதோ கொஞ்சம் சேமித்து வைத்து, அதை வைத்துக்கொண்டு வாழ்க்கை சக்கரத்தை ஓட்டுபவர்கள். பலர் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகள் அனுப்பும் சொற்ப பணத்தில் வாழ்பவர்கள். இத்தகையவர்களுக்கு மத்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் அனைத்து உதவிகள், சலுகைகளை வழங்கிட வேண்டும்.

1999-ம் ஆண்டு வெளியிடப்பட்ட முதியோர்களுக்கான தேசிய கொள்கையில், மத்திய அரசாங்கம் அனைத்து போக்குவரத்துகளிலும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்து இருந்தது. ஆனால், "கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி.." என்ற பாடலுக்கேற்ப, ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி முதல் திடீரென்று நிறுத்தப்பட்டது. அதுவரையில், ரெயில் கட்டணத்தில் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் பயணிகளுக்கு 40 சதவீத சலுகையும் வழங்கப்பட்டுவந்தது.

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த சலுகை சில குறிப்பிட்ட ரெயில்களைத்தவிர அனைத்து எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் ரெயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளில் பயணம் செய்யவும் வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று நிறுத்தப்பட்டது மூத்த குடிமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கொரோனா நேரத்தில் கொண்டுவரப்பட்ட பல கட்டுப்பாடுகள், இப்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து, இனி அப்படியே போய்விடும் என்ற நிலையில் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மட்டும் மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள், "எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்" என்று அபயக் குரல் எழுப்பி வருகிறார்கள். இவ்வாறு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை நிறுத்தியதன் மூலம் ரெயில்வேக்கு எவ்வளவு பணம் மிச்சமாகியுள்ளது? என்று மத்திய பிரதேசத்தில் உள்ள சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதற்கு, "2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் ரூ.2,560.90 கோடி மட்டுமே" என பதில் கிடைத்துள்ளது. ஆக, மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க ஆண்டுக்கு 1,024 கோடியே 36 லட்சம் ரூபாய்தான் செலவாகும். இந்த நிலையில், "நிறுத்தப்பட்டுள்ள மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் எப்போது வழங்கப்படும்?" என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய ரெயில்வே மந்திரி, "இதற்கு சாத்தியமில்லை" என்று பதில் அளித்தது, மூத்த குடிமக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. பல்வேறு உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.59 ஆயிரம் கோடியும், ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்களின் பென்சனுக்காக ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் செலவழிக்கும் ரெயில்வே நிர்வாகம், இந்த ரூ.1,024 கோடியை கருணையுடன் மீண்டும் கட்டண சலுகையாக வழங்கவேண்டும்.


Next Story