வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் வேண்டாம்
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கி, இன்றளவும் அதே முறையில்தான் வாக்குப்பதிவு நடக்கிறது.
உலகிலேயே ஜனநாயகம் தழைக்கும் நாடாக திகழ்வது இந்தியாதான். மக்களே தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. இன்றும் உத்திரமேரூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை பார்த்தால், 10-ம் நூற்றாண்டிலேயே குடவோலை மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த சான்று இருக்கிறது. அந்தவகையில்தான் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1952-ம் ஆண்டு முதல் மக்களே ஓட்டுப்போட்டு மத்தியிலும், மாநிலங்களிலும் தங்களை ஆள்வது யார்? என்று தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலில் இருக்கிறது.
ஓட்டுப்பெட்டியில் வாக்கு சீட்டுகளை போடும் முறையில் கள்ள ஓட்டுப்போட வாய்ப்பு இருக்கிறது என்று பரவலாக புகார் எழுந்தது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யலாம், பல மேலை நாடுகளில் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது என்று முடிவெடுக்கப்பட்டது. முதல் முறையாக 1982-ம் ஆண்டு கேரளாவில் உள்ள பரவூர் சட்டசபை தொகுதியில் மொத்தம் உள்ள 123 வாக்குச்சாவடிகளில், 50 வாக்குச்சாவடிகளில் 'எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்' என்று கூறப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு பரீட்சார்த்தமாக நடந்தது. அது வெற்றிகரமாக நடந்ததால் இந்த முறைக்காக சட்டத்திருத்தம் 1989-ல் கொண்டு வரப்பட்டு 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கி இன்றளவும் அதே முறையில்தான் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த முறை வேண்டாம், இதில் மோசடி நடக்கிறது, மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் வேண்டும், அப்படி இல்லையென்றால் 'விவிபேட்' என்ற எந்திரத்தின் மூலம் கிடைக்கும் ஒப்புகைச் சீட்டை வாக்காளர்களிடம் கொடுத்து அவர்களை வாக்குப் பெட்டியில் போட வைக்க வேண்டும், அதுவும் இல்லையென்றால், ஒப்புகைச் சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது கண்ணை மூடிக்கொண்டு சந்தேகம் கொள்ள வேண்டாம். எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை சீல் வைத்து 45 நாட்கள் பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதிவான வாக்குகளில் 5 சதவீத வாக்குகளுக்கான ஒப்புகைச் சீட்டை ஆய்வு செய்யலாம். வாக்கு எண்ணிக்கையில் 2-வது அல்லது 3-வதுஇடத்தில் வரும் வேட்பாளர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவர்கள் முறையிடும் பட்சத்தில் வாக்குப்பதிவு எந்திரம், விவிபேட் மற்றும் கட்டுப்பாடு எந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் பதிவான மெமரியை என்ஜினீயர்கள் குழு மூலம் ஆய்வு செய்து சரிபார்த்துக்கொள்ளலாம். அதையும் தேர்தல் முடிவு வந்து 7 நாட்களுக்குள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே முடியும் என்று மிக மிக தெளிவாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இனி பழையவாக்கு சீட்டு முறைக்கு திரும்பப்போகும் முடிவே கிஞ்சித்தும் கிடையாது என்று திட்டவட்டமாக தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முறை மீதோ, தேர்தல் மீதோ இனி யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ள வேண்டியது இல்லை. தேர்தல் கமிஷன் நடத்தும் தேர்தல் முறை வெளிப்படைத்தன்மையானது, இதில் அனைவரும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.