ஏமாற்றம் தந்த ஒலிம்பிக் போட்டி முடிவு


ஏமாற்றம் தந்த ஒலிம்பிக் போட்டி முடிவு
x

இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்ட ஜப்பான், 3-வது இடத்தை பிடித்து அசத்தியது.


பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் 17 நாட்கள் கோலாகலமாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என்று 126 பதக்கங்களுடன் முதல் இடத்தையும் நமது அண்டை நாடான சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என்று 91 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும் பிடித்தன. மக்கள்தொகையில் முதலிடம், அனைத்து துறைகளிலும் வேகமான வளர்ச்சி என்ற சிறப்பை பெற்றுள்ள இந்தியா, விளையாட்டுத்துறையில் இன்னும் போக வேண்டிய தூரம் வெகுதொலைவில் இருக்கிறது என்பதை பதக்கப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது. ஒரு தங்கம்கூட பெறாத நிலையில், ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கத்துடன் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. பதக்கப் பட்டியலிலும் 71-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

மொத்தத்தில் ஒலிம்பிக் போட்டி முடிவுகள் இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தாலும், பங்கேற்று விளையாடியவர்களில் 8 வீரர்-வீராங்கனைகள் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு, 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். அவர்களும் பதக்கம் வென்றிருந்தால், இந்தியாவின் கனவான இரட்டை இலக்கத்தை எட்டியிருக்க முடியும். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து 117 பேர் மட்டுமே சென்றிருந்தனர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த 11 பேர் அடங்குவர். தமிழக வீரர்-வீராங்கனைகளில் யாரும் சோபிக்கவில்லை என்பது நமக்கு இரட்டை ஏமாற்றமே

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவிக்கவேண்டும் என்ற வேட்கையில், பல நாடுகள் நிறைய வீரர்களை சிறப்பாக தயார்படுத்தியிருந்தன. இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகக் கொண்ட ஜப்பானில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தாற்போல 3-வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. ஒலிம்பிக்கில் மொத்தம் இருந்த 32 போட்டிகளில், சீனா 30-ல் கலந்துகொண்டு விளையாடியது. ஆனால், இந்தியா 16 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வீரர்-வீராங்கனைகளை தயார் செய்வதற்கு நிதி ஒதுக்கியதில் இந்தியா எந்த குறையும் வைக்கவில்லை. இந்த ஒலிம்பிக் போட்டிக்காக ரூ,470 கோடி செலவழிக்கப்பட்டதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. என்றாலும், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்களை கொத்தாக அறுவடை செய்வது என்பது இன்னும் கனவாகவே உள்ளது. இனி நடந்ததை விட்டுவிட்டு, நடப்பதை பற்றி சிந்திக்கவேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போது இருந்தே வீரர்-வீராங்கனைகளை தயார்படுத்தும் வகையில், தீவிர பயிற்சியளிக்க வேண்டும். இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட 117 பேருக்கும் தொடர்ந்து இப்போது இருந்தே பயிற்சியளிக்கவேண்டும்.

முன்கூட்டியே பயிற்சி ஒரு பக்கம் நடந்தாலும், சரியான திட்டமிடலும் அவசியம். எந்த விளையாட்டில் பதக்கங்களை பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சீனா குவித்த 40 தங்கப் பதக்கங்களில் 23 டைவிங், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், பளு தூக்குதல் ஆகிய 4 விளையாட்டுகளில்தான் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா பெற்ற 40 தங்கப்பதக்கங்களில் 22 தடகளம், நீச்சல் போட்டிகளில் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதுபோல ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் குறிப்பிட்ட விளையாட்டுகளிலேயே பதக்கங்களை குவித்துள்ளன. அதுபோல, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் இந்தியா அதிக கவனம் செலுத்தினால், அடுத்து அமெரிக்கா நடத்தும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை குவிப்பது நிச்சயம்.


Next Story