ஏமாற்றம் அளித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!


Disappointing GST Council meeting!
x

54-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் திங்கட்கிழமை டெல்லியில் நடந்தது.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 31-ந்தேதி நள்ளிரவு முதல் இந்திய வரிவிதிப்பு முறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதாவது, நாடு முழுவதும் சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த ஜி.எஸ்.டி. 0, 3, 5, 12, 18, 28 ஆகிய சதவீதங்களில் வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விகிதங்களில் மாற்றம்வேண்டும் என்று அவ்வப்போது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன.

இதுபோன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், அனைத்து மாநில நிதி மந்திரிகளையும் உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் அவ்வப்போது கூடி வரி விகிதங்களில் சில மாற்றங்களை அமல்படுத்துகிறது. இப்போது 54-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த வாரம் திங்கட்கிழமை டெல்லியில் நடந்தது. இதில் அதிகம் எதிர்பார்த்தது ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.யை குறைக்கவேண்டும் என்பதுதான். இந்த இரு காப்பீடுகளுமே மக்களின் வாழ்வில் மிகவும் அத்தியாவசிய தேவையானதாகும். எல்லோரையுமே, "ஆயுள் காப்பீடு எடுங்கள். மருத்துவ காப்பீடு எடுங்கள்" என்று அறிவுரை கூறிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த காப்பீடுகளுக்கான பிரிமியம் தொகை 18 சதவீதம் என்பது மிக அதிகம் என்ற கருத்து மக்களிடம் நிலவியது.

இந்த கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்தின. இத்தகைய சூழ்நிலையில், 54-வது கூட்டத்தில் இந்த பிரிமியத்துக்கான ஜி.எஸ்.டி. ரத்து செய்யப்படும் அல்லது 5 சதவீதமாக குறைக்கப்படும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், அது எதுவும் நடக்கவில்லை. மாறாக இந்த கோரிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக தமிழ்நாடு, பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம், கேரளா, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், மேகாலயா, கோவா, தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநில நிதி மந்திரிகள் கொண்ட குழு பரிசீலித்து தன் அறிக்கையை அக்டோபர் மாதத்துக்குள் தாக்கல் செய்யும். நவம்பர் மாத கூட்டத்தில் இந்த அறிக்கை பரிசீலிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதே குழுதான் கடந்த 3 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை சீரமைக்க ஆலோசனை நடத்திவருகிறது. அந்தப் பணியே இன்னும் முடியவில்லை. இப்போதுகூட ஒரு பணி கூடுதலாக சேர்ந்திருக்கிறது. ஆக, நடைபெற்ற 54-வது கூட்டத்தில் ஏதாவது வரி குறைக்கப்பட்டதா? என்றால், ஒரே ஆறுதலாக புற்றுநோய்க்கான 3 மருந்துகளுக்கு 12 சதவீத வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல, நொறுக்கு தீனிக்கு வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கார் சீட்டுகளுக்கான வரி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை மோட்டார் சைக்கிள் சீட்டுக்கு 28 சதவீத வரிதான் இருந்தது. அதை கார் சீட்டுக்கு இணையாக 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக கார் சீட்டுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக, நடந்து முடிந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மக்கள் எதிர்பார்த்தது அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடுத்த கூட்டத்தில் காப்பீடு பிரிமியத்தை பொருத்த அளவில் ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


Next Story