49 ஆண்டுகளுக்கு பிறகு கண்டனம்


49 ஆண்டுகளுக்கு பிறகு கண்டனம்
x

பா ஜனதா வேட்பாளரும், கடந்த முறை சபாநாயகராக இருந்தவருமான ஓம் பிர்லாவே மீண்டும் பதவியேற்றார்.

சென்னை,

18-வது மக்களவை நிறைய பரபரப்புகளுடனேயே தொடங்கியது. பா ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த 2 தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்ற பா ஜனதா இந்த முறை மொத்தம் உள்ள 543 இடங்களில், கண்டிப்பாக 370 இடங்களில் வெற்றி பெறும், பா ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்ற உறுதியோடு பிரதமர் நரேந்திரமோடியும், மற்ற தலைவர்களும் இருந்த நிலையில், பா ஜனதா 240 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. மாறாக கடந்த 2 தேர்தல்களிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத நிலையில், குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த தேர்தலில் 99 இடங்களில் வாகைச்சூடி, ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகியிருக்கிறார். மொத்தமாக "இந்தியா'' கூட்டணி 236 இடங்களில் வெற்றி பெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்ற நிகழ்வில், பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2 முறையும் செய்ததுபோல அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை தலைகுனிந்து வணங்கிவிட்டே பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராகுல்காந்தியும், மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை தூக்கி வைத்துக்கொண்டே பதவிப்பிரமாண உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். சபாநாயகர் கடந்த 50 ஆண்டுகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த முறை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கே கொடுக்க வேண்டும் என்ற அக்கட்சியின் கோரிக்கை, பா ஜனதாவால் ஏற்கப்படாததால், போட்டி வேட்பாளரை நிறுத்தியது. என்றாலும், இந்த தேர்தலில் பா ஜனதா வேட்பாளரும், கடந்த முறை சபாநாயகராக இருந்தவருமான ஓம் பிர்லாவே மீண்டும் பதவியேற்றார்.

அவர் பதவியேற்றவுடன் 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை கண்டித்து ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார். 21 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையினால் ஏற்பட்ட விளைவுகளை அந்த தீர்மானத்தில் சபாநாயகர் விளக்கியிருந்தார். அந்த தீர்மானத்தில், "இந்தியா மீது சர்வாதிகாரம், இந்திராகாந்தியால் திணிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயக பண்புகள் நசுக்கப்பட்டன. கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டது. நெருக்கடிநிலை என்ற அந்த கருப்பு நாட்களில் சர்வாதிகார காங்கிரஸ் அரசாங்கத்தின் கரங்களில் பலர் தங்கள் உயிரை இழந்தனர். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நெருக்கடி நிலையை எதிர்த்து போராடிய அனைவருக்கும் வணக்கங்கள். அத்தகைய கடமைமிக்க, தேசபக்தி மிகுந்த இந்திய குடிமக்களின் நினைவாக 2 நிமிடம் மவுனமாக எழுந்து நிற்போம்'' என்றார்.

சபாநாயகரே கொண்டுவந்த இந்த தீர்மானம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி எதிர்த்தாலும், நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட 'இந்தியா' கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சபாநாயகர் கண்டன தீர்மானம் கொண்டு வந்ததுபோல அடுத்தநாள் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் தனது உரையில், "1975-ம் ஆண்டு ஜூன் 25-ம்தேதி அமல்படுத்தப்பட்ட நெருக்கடிநிலை, அரசியலமைப்பின் மீதான நேரடி தாக்குதலின் மிகப்பெரிய மற்றும் இருண்ட அத்தியாயமாகும், இதனால் நாடே கொதித்துப்போனது'' என்று குறிப்பிட்டார். நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தி 49 ஆண்டுகள் முடிந்த நிலையில், இவ்வளவு காலமும் இல்லாத வகையில், சபாநாயகரே கண்டன தீர்மானம் கொண்டுவந்ததும், ஜனாதிபதி தன் உரையில் அதை இருண்டகாலம் என்று சுட்டிக்காட்டியதும் ஒரு வித்தியாசத்தை படைத்துவிட்டது.


Next Story