ஆறுதல் அளிக்கும் நிவாரணம்; ஆனால் முழு பயன் இல்லையே!
பருவம் தவறிய மழையால், பெரும் இழப்புக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆளாகியுள்ளார்கள். 80 சதவீதத்துக்கு மேல் அறுவடை முடிந்தபிறகு, 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதால், பெரிய அளவில் பயன் இல்லை என்பது விவசாயிகள் கருத்து.
கடும் உழைப்பை நல்கி, பெரும் செலவுகளைத் தாங்கி, பயிர் சாகுபடி செய்யும் விவசாயிக்கு ஒரு காலத்திலும் நிச்சயமாக இவ்வளவு வருமானம் வரும் என்று மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கமுடியாது. ஏனெனில், இயற்கையை ஒருபோதும் விவசாயிகளால் கணிக்க முடியாது. கடந்த மாதம் இறுதியில் தொடங்கி ஒரு வாரம் பெய்த பருவம் தவறிய மழையால், பெரும் இழப்புக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆளாகியுள்ளார்கள். சம்பா பயிர் சாகுபடி செய்து நெல் பயிர்கள் நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், பருவம் தவறிய கனமழையால், வயல்கள் எல்லாம் ஏரிகளோ என்று எண்ணும் அளவுக்கு, பயிர்கள் நீரில் மூழ்கி நின்றன. விவசாயிகள் வயல்களில் தேங்கியிருந்த நீரை அகற்றுவதற்கு திணறிப்போய்விட்டார்கள். நெற்கதிர்கள் எல்லாம் நீரில் மூழ்கியிருந்ததால், ஈரப்பதம் அதிகமாக இருந்தது.
வழக்கமாக சம்பா நெல்லை அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் கொண்டுபோய் விற்கச்சென்றால், 17 சதவீதம் வரை ஈரப்பதம் இருந்தால் மட்டுமே வாங்குவது வழக்கம். இந்த ஆண்டு மழை பெய்தவுடன் நெற்கதிர்கள் நீரில் மூழ்கியிருந்ததைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார். கடந்த 5-ந்தேதியே பிரதமர் நரேந்திரமோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். "பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், அப்போது பெய்த பருவம் தவறிய மழையால், அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவேண்டும்" என்று கேட்டிருந்தார்.
முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மத்திய குழுவும் உடனடியாக வந்து பார்வையிட்டு சென்றது. ஆனால், இவ்வளவு நாட்கள் கழித்து, கடந்த வாரம் வியாழக்கிழமைதான் மத்திய அரசு 8 டெல்டா மாவட்டங்களில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இது ஆறுதல் அளிக்கும் நிவாரணம், ஆனால் காலம் கடந்த நிவாரணம் என்கிறார், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன். ஏனெனில், ஈரப்பதம் உள்ள நெல்லை இவ்வளவு நாளும் யாராலும் அறுவடை செய்யாமல் வைத்திருக்க முடியாது. இவ்வளவு நாட்கள் அறுவடை செய்யாமல் இருந்திருந்தால், ஒன்று மண்ணோடு மண்ணாய் மக்கிப் போயிருக்கும் அல்லது கதிர்கள் முளைத்து அழிந்திருக்கும்.
80 சதவீதத்துக்கு மேல் அறுவடை முடிந்தபிறகு, இப்போது இந்த தளர்வை மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதால், பெரிய அளவில் பயன் இல்லை என்பது விவசாயிகள் கருத்து. இந்தநிலை, வருங்காலத்தில் இல்லாமல் இருக்கவேண்டும் என்றால், இதுபோன்ற சமயங்களில் அடுத்த நாளே மத்திய அரசாங்கம் தளர்வை அறிவிக்கவேண்டும் அல்லது மழை அளவை கருத்தில்கொண்டு, மாநில அரசே முடிவெடுத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், இவ்வாறு ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்யப்படும் அரிசியை தமிழகத்துக்குள் மட்டுமே பயன்படுத்தவேண்டும், உணவு கழகத்திடம் பரிமாற்ற அடிப்படையில் அரிசி பெற கொண்டு வரக்கூடாது, நெல்லை உலர வைக்கும் வசதியை தமிழக அரசே உருவாக்கவேண்டும். நெல் இழப்பு ஏற்பட்டால், அதையும் தமிழக அரசே ஏற்கவேண்டும் என்பதையெல்லாம் மத்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாகும்.