நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கிவிட்டது பா.ஜ.க.!
நரேந்திரமோடி பிரதமர் பொறுப்பை 2014-ம் ஆண்டு ஏற்று, தொடர்ந்து 2 முறை பிரதமராக பணியாற்றி வருகிறார்.
நரேந்திரமோடி பிரதமர் பொறுப்பை 2014-ம் ஆண்டு ஏற்று, தொடர்ந்து 2 முறை பிரதமராக பணியாற்றி வருகிறார். எல்லா மாநிலத்திலும் பா.ஜ.க.வை வலுப்படுத்த அவர் கடும் முயற்சிகளை எடுத்துவருகிறார். அடிக்கடி, "காங்கிரஸ் இல்லாத இந்தியா" என்ற முழக்கத்தை முன்னெடுத்து வருகிறார். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. தனியாக 303 இடங்களிலும், கூட்டணியோடு சேர்ந்து 353 இடங்களிலும் வெற்றி பெற்றது. வருகிற தேர்தலில் அதைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதை தன் குறிக்கோளாக வைத்து, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
இதற்காக, 'லோக்சபா பிரவாஸ்', அதாவது 'லோக்சபா பயணம்' என்ற பெயரில் மத்திய-மாநில பா.ஜ.க. தலைவர்கள் நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை வகுத்துள்ளனர். இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறாத 144 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான செயல் திட்டத்தை கடந்த வாரம் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் 15 பக்கங்களில் தாக்கல் செய்தார்.
இந்த 144 தொகுதிகளில் தமிழ்நாட்டிலுள்ள கோவை, ஈரோடு, வேலூர், தென்சென்னை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இவை அனைத்திலும் வெற்றி பெற திட்டங்களை வகுத்துள்ளார். முதல் கட்டமாக பா.ஜ.க. தலைமை இந்த 144 தொகுதிகள் மற்றும் அதில் அடங்கிய சட்டசபை தொகுதிகள் பற்றிய விவரங்களை சேகரித்து, "பூத்" வாரியாக கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தொடங்கப்போகிறது. அடுத்த 18 மாதங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் 3 கட்டங்களாக தலைவர்கள் பணியாற்றப்போகிறார்கள். மேல்மட்டத்தில் தேசிய தலைவர்கள் அடங்கிய மத்திய குழு அமைக்கப்பட்டு இந்த திட்டத்தை கண்காணிக்கும். 2-வது கட்டமாக மாநிலங்களில் மூத்த தலைவர்கள் அடங்கிய மாநிலக்குழு அமைக்கப்பட்டு, மத்திய குழுவின் வழிகாட்டுதல்களை களப்பணியாக மேற்கொள்ளும். அடுத்து மத்திய மந்திரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, பணிகளை கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், மத்திய மற்றும் மாநில குழுக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும்.
இதுமட்டுமல்லாமல், அமைப்பு ரீதியாக பொறுப்புகளை வகிக்கும் தலைவர்கள், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை இரவு தங்கி, அந்த தொகுதி மக்களோடு நேரத்தை செலவிடுவார்கள். இதுபோல, ஒவ்வொரு நாடாளுமன்ற பொறுப்பாளரும், அந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு இரவு தங்கி மக்களை சந்தித்து பேசுவார்கள். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட குழு, அந்த தொகுதியிலுள்ள சாதிகள் விவரம், கட்சிக்குள்ள சாதக பாதகங்கள், எந்தெந்த சட்டசபை தொகுதிகள் வலுவில்லாமல் இருக்கிறது? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பை தயாரிப்பார்கள்.
மேலும், வேட்பாளர் தேர்வும் தொடங்கி முடிவு செய்யப்படும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாதம் ஒருமுறை மக்கள் பிரச்சினைக்காக போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள், மத்திய அரசாங்க திட்டப் பயனாளிகள், பெண்கள் போன்ற ஒவ்வொரு பிரிவையும் நேரடியாக சந்தித்து பேசவும், அதில் மத்திய மந்திரிகள் கலந்துகொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது என்று நினைக்காமல், இப்போதே தேர்தல் பணிகளை பா.ஜ.க. தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எப்படியும் இந்த 'லோக்சபா பயணம்' திட்டத்தை தீவிரமாக நிறைவேற்றி, செயல்பாட்டில் முதலிடத்தை பெறவேண்டும் என்ற நோக்கில் தன் பணிகளை தொடங்கிவிட்டார். பா.ஜ.க. பணிகளை தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகள் எப்போது தொடங்கப்போகிறது?. எந்த வகையில் தன் முயற்சிகளை தொடங்கும்? என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.