தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படும் பாரதியார் பிறந்த நாள்!

பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி ஆகும். இதைத்தான் காசி என்று கூறுகிறோம்.
பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி ஆகும். இதைத்தான் காசி என்று கூறுகிறோம். இந்த மாவட்ட கலெக்டராக தமிழ்நாட்டிலுள்ள கடையநல்லூரை சேர்ந்த ராஜலிங்கம் இருக்கிறார். இந்த காசியில்தான் மகாகவி பாரதியார் தன்னுடைய மாணவப்பருவத்தில், தன் தங்கையை மணமுடித்து கொடுத்த மாமா வீட்டில் தங்கியிருந்தார். "வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்" உள்பட பல பாடல்களை பாரதியார் காசியில் இருந்தபோதுதான் எழுதியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடியின் அறிவுறுத்தலின்படி, உத்தரபிரதேச அரசாங்கம் வருகிற 16-ந்தேதி வரை ஒருமாத காலம் பாரதியாரின் 141-வது பிறந்த நாளையொட்டி, "காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியை கொண்டாடுகிறது. பாரதியார் வாழ்ந்த வீடு சிவமடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டுக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, அனைத்து மாநில மக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். பாரதி யார்? என்று இப்போது அவர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியையொட்டி, பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில் தமிழில் பேச, எழுத, வாசிக்க கற்றுக்கொடுக்கும் புத்தகங்கள், மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தின் புத்தக ஸ்டாலில் மிக வேகமாக விற்றுத்தீர்ந்து விடுகின்றன என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆக, காசி தமிழ் சங்கமம் அனைத்து மாநில மக்களுக்கும் தமிழை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
கங்கை கரையில் 20-க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. இதில், அனுமர் படித்துறையில்தான் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்குதான் பாரதியார் வாழ்ந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டில் ஒரு அறையை தமிழக அரசு பாரதியாரின் உறவினர்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்து, பாரதியார் நினைவு இல்லமாக்கியுள்ளது. பாரதியாரின் பிறந்த நாளான கடந்த 11-ந்தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்துள்ளார். தமிழக அரசு மட்டுமல்லாமல், உத்தரபிரதேச அரசாங்கமும், பாரதியார் வாழ்ந்த அந்த வீட்டின் மற்றொரு பகுதியை புனரமைத்து டிஜிட்டல் நினைவகம் அமைக்கிறது.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி, அங்குள்ள காசி விசுவநாதர் கோவிலில் முதல் முறையாக தமிழ்குரல் ஒலிக்கப்போகிறது. அந்த கோவில் வளாகத்தில் வருகிற 15-ந்தேதி இளையராஜாவின் பக்தி பாடல் இசைக்கச்சேரி நடக்கிறது. மேலும், மத்திய ரெயில்வே மந்திரியும், "காசி தமிழ் சங்கமம் விரைவு ரெயில் என்ற புதிய ரெயில் சேவை காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொடங்கப்படும்" என்றும் அறிவித்துள்ளார். இந்த ரெயிலை கன்னியாகுமரியில் இருந்து விடவேண்டும்.
இதுமட்டுமல்லாமல், பாரதியார் பிறந்த தினம் இனி தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது, பாரதியாருக்கும் பெருமை; தமிழ்மொழிக்கும் பெருமை, தமிழ்நாட்டுக்கும் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. ஏனெனில், 22 தேசிய மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. இந்திய அரசியலமைப்பு சட்டம் 8-வது அட்டணையிலுள்ள இந்த 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்கவேண்டும் என்ற தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையையும் மத்திய அரசாங்கம் நிறைவேற்றி, 22 தேசிய மொழிகளுக்கும் பெருமை சேர்க்கவேண்டும். பாரதியார் பிறந்த நாளை இனி தேசிய மொழிகள் தினமாக அனைத்து மாநிலங்களும் கொண்டாடும்போது, பாரதியார் பற்றியும், தமிழ்நாடு பற்றியும், தமிழ்மொழி பற்றியும் இந்தியா முழுவதும் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.






