பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் !


பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் !
x

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பல கேள்விகளுக்கு இந்த மழைக்கால கூட்டத்தொடர் விடை அளிக்கும்.

அடுத்த 10 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை இந்தியா சந்திக்க இருக்கிறது. 2 முறை பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆட்சி அமைத்த பா.ஜ.க., அடுத்த முறை இன்னும் அதிக பெரும்பான்மையுடன் "ஹாட்ரிக்" சாதனை படைக்க காய்களை நகர்த்தி வருகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளும், "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே" என்பதை புரிந்துகொண்டு, ஒரே அணியாக தேர்தலில் நின்று, பா.ஜ.க.வை வீழ்த்த முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்து முடிந்து, வருகிற 17, 18-ந்தேதிகளில் பெங்களூருவில் அடுத்தக் கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது. 23 நாட்களில் 17 நாட்கள் அவை கூடும். இந்த கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கவேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, கடைசியாக நடக்கும் மழைக்கால கூட்டத்தொடர் இதுதான். ஆனால், அமைதியாக நடக்குமா?, அல்லது கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல அமளியில் முடியுமா? என்பது சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது.

தற்போது, நாடாளுமன்றத்தில் 38 மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரேயொரு மசோதாதான் நிறைவேறியது. இந்தக் கூட்டத்தொடரில், பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், டெல்லி அரசு அதிகாரிகளை மாநில அரசே நியமிக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தக் கூடிய அவசர சட்டம், விலைவாசி உயர்வு போன்றவை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பிரச்சினைகளை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சோதிப்பதற்கும் இந்தக் கூட்டத்தொடர் ஒரு தளமாக அமையும் என்பதும் அரசியல் நோக்கர்களின் கருத்து.

ஏனெனில், பொது சிவில் சட்டம் பெரும்பாலான எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்பட்டாலும், ஆம் ஆத்மி, சிவசேனா ஆகிய கட்சிகள் இதை ஆதரிப்பதாக ஏற்கனவே தெரிவித்துவிட்டன. 15 எதிர்க்கட்சிகளில், 2 கட்சிகள் தனி நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. இதுபோல, டெல்லி அரசாங்க திருத்த மசோதாவுக்கு ஆதரவா?, எதிர்ப்பா? என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி இதுவரையில் தெரிவிக்கவில்லை. அந்த வகையில், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் சற்று கருத்து வேறுபாடு இருக்கிறது.

மேலும், கூட்டத்தொடர் அமைதியாக நடந்தால், கொண்டுவரப்படும் மசோதாக்கள் பா.ஜ.க.வுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக நிறைவேறிவிடும். ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தோற்கடிப்பதற்கான எண்ணிக்கை இருக்கிறதா? என்பதும் இந்தக் கூட்டத்தொடரில் தெரிந்துவிடும். ஏனெனில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 102 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 18 எதிர்க்கட்சிகளுக்கு 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மீதமுள்ள 7 கட்சிகளுக்கு 23 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தலா 9 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே மாநிலங்களவையில் வாக்களித்து இருக்கிறது. இப்போது, டெல்லி அரசாங்க மசோதாவுக்கு ஆதரவு அளிக்குமா? என்பதும், இந்தக் கூட்டத்தொடரில்தான் தெரியும். மொத்தத்தில், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பல கேள்விகளுக்கு இந்த மழைக்கால கூட்டத்தொடர் விடை அளிக்கும்.


Next Story