கலைஞரின் எழுத்துகள் மக்களுக்கு சொந்தம்!


கலைஞரின் எழுத்துகள் மக்களுக்கு சொந்தம்!
x

திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பிய பூங்கா போன்ற அவர் எழுதிய உரை நூல்கள் எல்லோருடைய, குறிப்பாக தமிழ் அறிஞர்களின் போற்றுதலை பெற்றுள்ளது.

மறைந்தும் மறையாமல் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதியின் படைப்புகள் அனைத்தும், நூலுரிமைத் தொகை எதுவுமில்லாமல் நாட்டுடைமை ஆக்கப்படுகிறது என்ற நல்ல அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டது, உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களை பரவசப்படுத்தியுள்ளது.

5 முறை முதல்-அமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டுகளுக்கு மேல் ஒரு கட்சியின் தலைவர் என்று அடுக்கடுக்கான பெருமைகளுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி என்றாலும், அவரது எழுத்தாற்றல், பேச்சாற்றல் என்பது பெரும் புகழுக்குரியது. அவர் எழுத்துகளை எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதைகள், கட்டுரைகள், அரசியல் அறிக்கைகள், கடிதங்கள், கவிதைகள் என்று பல பரிணாமங்களில் ஒளிவீசுகிறது. 'உடன் பிறப்பே..' என்று அழைத்து அவர் எழுதிய கடிதங்களெல்லாம் தி.மு.க தொண்டர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவும். திருக்குறளுக்கு அவர் எழுதிய 'குறளோவியம்', அய்யன் வள்ளுவரை பாமர மக்களும் படித்து இன்புறவைத்தது. தேனலைகள், சங்கத்தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பிய பூங்கா போன்ற அவர் எழுதிய உரை நூல்கள் எல்லோருடைய, குறிப்பாக தமிழ் அறிஞர்களின் போற்றுதலை பெற்றுள்ளது.

மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்ற நிலையில், அங்குதான் அவரது எழுத்து பணி வேகம் எடுத்தது. சிறையில் இருக்கும்போது அவர் எழுதிய கவி வசனங்கள் தொகுக்கப்பட்டு, 'கவிதையல்ல', 'முத்தாரம்' என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள் 54 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவரது வாழ்க்கை வரலாறை அவரே 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் எழுதிய வரலாற்று நூல் 6 தொகுதிகளாக பிரசுரிக்கப்பட்டன. இதுபோல, 1957 முதல் 2018-ம் ஆண்டு வரை சட்டமன்றத்தில் அவர் முதல்-அமைச்சராக, அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக ஆற்றிய உரைகள் இன்றும், எதிர்காலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வழிகாட்டும் வகையில் 12 தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவருடைய படைப்புகளையெல்லாம் எடுத்துக்கொண்டால் 178 நூல்களாக வெளிவந்திருக்கிறது. அவரது முதல் கட்டுரை அவருடைய 18-வது வயதில் அண்ணாவின் 'திராவிட நாடு' இதழில் 'இளம்புலி' என்ற பெயரில் வெளியானது. 23 வயதில் 'ராஜகுமாரி' என்ற படத்தில் தொடங்கி மொத்தம் 75 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அவருடைய படைப்புகளின் பக்கங்களை கணக்கிட்டால் 7 லட்சம் பக்கங்களுக்கு மேல் வருகிறது. ஒரு தனி மனிதனால் இவ்வளவு பக்கங்களை எப்படி எழுத முடிந்தது? என்பதுதான் எல்லோருடைய வியப்பாகும். கலைஞரின் பேருழைப்பால் விளைந்த நற்கனிகளான அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டின் கடைக்கோடி தமிழனுக்கும் சொந்தம் என்று கூறும் வகையில், இன்றைக்கு நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது.

கருணாநிதியின் படைப்புகளுக்கு முழு உரிமையுடையவரான அவரது துணைவி ராஜாத்தி அம்மாள் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தனக்கு நூலுரிமைத் தொகை எதுவும் தேவையில்லை என்று பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார். இனி கலைஞர் கருணாநிதியின் படைப்புகளான 178 நூல்களையும் யாரும் அச்சிட்டுக்கொள்ளலாம். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள் அவ்வை சொன்னது போல, "செங்கோல் ஏந்திய செம்மொழி சிகரம் முத்தமிழறிஞர் கலைஞர் நூல்களை நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமை ஆக்கியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தமிழ் திருப்பணியாகும்."


Next Story