30 நாட்களில் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!


30 நாட்களில் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!
x

அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் என தொடங்கி கிராம நிர்வாக அலுவலர்கள் வரை பல அரசு அலுவலர்களிடம் மனுக்கள் கொடுக்கப்படுகிறது.

சென்னை,

பொதுவாக மக்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் என தொடங்கி கிராம நிர்வாக அலுவலர்கள் வரை பல அரசு அலுவலர்களிடம் மனுக்கள் கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுக்க வேண்டியநிலை ஏற்படும். ஒவ்வொரு அலுவலகமும் வெவ்வேறு இடத்தில் இருக்கும். அதற்கெல்லாம் நடையாய் நடந்து செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், அந்த அலுவலகங்களில் அதிகாரிகளை சந்திக்க பார்வையாளர்கள் நேரம் என தனியாக வைத்திருப்பார்கள். ஆக, ஒரு நேரத்தில் ஒரு அலுவலகத்தில் உள்ள அதிகாரியை சந்தித்துதான் மனு கொடுக்க முடியும். மற்றொரு அதிகாரியிடம் மனு கொடுக்க வேண்டுமென்றால் இன்னொரு நாள் போய்தான் கொடுக்க முடியும்.

இப்படி மனு கொடுப்பதற்கே பொதுமக்களுக்கு பல நாட்கள் ஆகும். மேலும், தாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது என்ன தீர்வு எப்போது கிடைக்கும்? என்று நிச்சயமற்ற நிலைதான் இருக்கும். இந்த குறையை போக்க அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களை சென்று சேரும் வகையிலும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி 'மக்களுடன் முதல்வர்' என்ற ஒரு மகத்தான திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகளுக்கு மக்கள் கொடுக்கும் கோரிக்கைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில், 5 மாதங்களில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சிகளில் 641 முகாம்கள், நகராட்சிகளில் 632 முகாம்கள், பேரூராட்சிகளில் 520 முகாம்கள், புறநகர் பகுதிகளில் 265 முகாம்கள், வார்டுக்கு ஒரு முகாம் என மொத்தம் 2,058 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில், 13 முக்கியமான துறைகள் மூலம் 44 சேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் பெறப்பட்ட 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் தீர்வு காணப்பட்டு, ஒரு இமாலய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

செயல்முறைகளை விரைவுபடுத்துவது, தாமதங்களை குறைப்பது, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் எண்ணிக்கையை குறைப்பது, விரைவாகவும் எளிதாகவும் சேவைகளை வழங்குவது என்ற இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்காக இந்த 13 துறை அரசு அலுவலர்களுக்கு எவ்வளவு பாராட்டு வழங்கினாலும் தகும். இரண்டாம் கட்டமாக 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் இந்த மாதம் 11-ந்தேதி முதல் செப்டம்பர் 15 வரை 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன என்பது கிராமப்புற மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும்.

அரசு அலுவலர்களை தேடி மக்கள் செல்வதற்கு பதிலாக, மக்களை தேடி அரசு அலுவலர்கள் ஒன்றாக சென்று அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் இந்த மாபெரும் செயல் பாராட்டுக்குரியதாகும். 'மக்களுடன் முதல்வர்' திட்டம் மகத்தான வெற்றி பெற, அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் ஒவ்வொருவரும் 'மக்களுடன் நான்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து மனுக்கள் மீதும் விரைவாக தீர்வுகாண வேண்டும். மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால், அரசு துறைகள் மீதும், ஊழியர்கள் மீதும் நல்லெண்ணம் ஏற்படும்.


Next Story