தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளில் வேலைநேரம் 8 மணி என்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒரு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இப்போது அமலில் இருக்கும் 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் என்று கூறப்படும் சட்டத்தில்தான், சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் புதிதாக 65ஏ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சில இனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். அதாவது, ஏதேனும் தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளுக்கு இந்த சட்டத்தின் 51, 52, 54, 55, 56 மற்றும் 59-வது பிரிவுகளுக்கு விலக்களிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
இந்த திருத்தங்கள் ஒரு தொழிலாளி 12 மணி நேரம் வரையில் வேலைபார்க்க வகை செய்கிறது. தமிழ்நாட்டுக்கு நிறைய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நிறைய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த தொழில்களெல்லாம் உடலுழைப்பை அதிகம் செலுத்த வேண்டிய தேவை இல்லாத தொழில்களாகும். குறிப்பாக செல்போன் உற்பத்தி தொழில்கள், மின்னணு வன்பொருள் (ஹார்ட்வேர்) தொழில்கள், தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தொழில்கள் என்று 'குளுகுளு' அறைகளில் உட்கார்ந்து வேலைபார்க்க வேண்டிய தொழில்களாகும். இந்த தொழிற்சாலைகளெல்லாம், 'நாங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் வேலைநேரத்தில் நெகிழ்வுத்தன்மை வேண்டும்', என்று கூறுகிறார்கள். பல மாநிலங்களில் 12 மணி நேரம் வரை வேலைபார்க்கவும் நெகிழ்வுத்தன்மை அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தொழில்களுக்குத்தான் இந்த புதிய சட்டம் பொருந்துமே தவிர, எல்லா தொழில்களுக்கும் இல்லை. இந்த தொழிற்சாலைகளில் பஞ்சாலைகள் போல சங்கு ஊதினால் போட்டதை போட்டபடியே விட்டுவிட்டு போய்விட முடியாது. செய்ய தொடங்கிய தொழிலை முடித்து விட்டுத்தான் போகமுடியும். மேலும் இந்த 12 மணி நேர வேலை கட்டாயமில்லை, விருப்பப்படுவோர்களுக்கு மட்டும்தான். 4 நாட்களில் தினமும் 12 மணி நேரம் வேலைபார்த்து 48 மணிநேரம் உழைத்துவிட்டால் அடுத்து 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். அல்லது, வேலை பார்க்க விரும்பும் தொழிலாளிகளுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும்.
ஆனால் இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் 'தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதா?', உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தன. மேலும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மசோதா மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ள அரசு இறுதியான முடிவு எடுக்கும் முன்பு தொழிற்சங்கங்களை போல இளைஞர்கள், பொதுமக்கள், தொழில் அதிபர்களுடனும் ஆலோசனை நடத்தவேண்டும். எந்த காரணத்தை கொண்டும் தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டால், தமிழ்நாட்டின் தொழில்வளம் மட்டுமல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளும் பறிபோய்விடும்.