"உட் பர்னிச்சர்" பாதுகாப்பும்... பராமரிப்பும்... !
உட் பர்னிச்சர்களின் மேலே ‘டெர்மைட் கன்ட்ரோல் பூச்சிக்கொல்லியை தடவ வேண்டும். அப்போது தான் கரையான் மற்றும் பூஞ்சை பாதிப்பு தடுக்கப்படும்.
உட் பர்னிச்சர்களின் முதல் எதிரியான கரையான்கள் செங்கல்லில் துளையிட்டு உள்ளே நுழையும் திறம் பெற்றவை. மரச்சாமான்களை அரிப்பதில் அவற்றின் பங்கு அதிகம். ஒரு முறை வீட்டுக்குள் வந்துவிட்டால் போதும். அனைத்து மரச்சாமான்களையும் அரித்து மாவாக வெளித்தள்ளி விடும். அதனால், புது உட் பர்னிச்சர் வாங்கியதும் முன்னெச்சரிக்கையாக அவற்றின் மேலே 'டெர்மைட் கன்ட்ரோல் பூச்சிக்கொல்லியை தடவ வேண்டும். அப்போது தான் கரையான் மற்றும் பூஞ்சை பாதிப்பு தடுக்கப்படும்.
அழகான தோற்றம் கொண்ட மரச்சாமான்களுக்கு வீட்டில் எப்போதும் ஒரு இடம் உண்டு. அதனால் பலரும் வீடுகளில் உட் பர்னிச்சட் ஐட்டங்களை சற்று கூடுதல் விலை கொண்டதாக வாங்கி போட்டிருப்பார்கள். சரியான பராமரிப்பு அதற்கு தேவையாக இருக்கும். கரையான் மற்றும் பூஞ்சை போன்ற பாதிப்புகளால் அவற்றின் நீடித்த தன்மைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
உட் பர்னிச்சர் ஐட்டங்களின் பாதுகாப்புக்கு எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற குறிப்புகளை இங்கே காணலாம். கசப்பு கொண்ட வேப்பிலை பொடியை, கரையான்கள் தென்பட்ட உட் பர்னிச்சர்களில் தூவி விட்டால், கரையான்கள் தொல்லை அகலும். வேப்பிலையை நன்றாக அரைத்து, தண்ணீரில் கலந்து, துணியில் நனைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை துடைத்து வந்தாலும் பர்னிச்சர்கள் அரிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கும். வேம்பு மற்றும் தேக்கு மரங்களில் இயல்பாக கரையான்களுக்கு ஆகாது என்பதால், உட் பர்னிச்சர் ஐட்டங்களை அத்தகைய மரங்களில் செய்வதோ, தேர்ந்தெடுத்து வாங்குவதோ நல்லது. மர எண்ணெய் மற்றும் தேன் மெழுகு இரண்டும் சம அளவில் கலந்து, உட் பர்னிச்சர்களை சுத்தம் செய்தால் பளபளப்பாக ஆவதுடன், கரையான்கள் பர்னிச்சரில் தங்காது.
10 நாட்களுக்கு ஒரு முறை உலர்ந்த துணியால் உட் பர்னிச்சர்களை சுத்தம் செய்து, ஒரு முறை வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணியால் துடைக்கலாம். பிறகு, இரண்டு மணி நேரம் வெயிலில் உலர வைத்து, மீண்டும் சுத்தமான துணியில் துடைத்து விட்டால், கரையான் பாதிப்பு முற்றும் தடுக்கப்படும்.
மழை மற்றும் குளிர் காலங்களில் உட் பர்னிச்சரில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சைகள் தோன்றும். இதனால், வெள்ளை நிற பட்டைகள் தோன்றி அவற்றின் அழகும், தரமும் கெட்டு விடும். அதனால், நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, பஞ்சில் நனைத்து, உட் பர்னிச்சர்களின் மேல் ஒரு கோட்டிங் தேய்த்து பூஞ்சை பாதிப்பை தடுக்கலாம்.
உட் டைப் மேஜை மற்றும் நாற்காலிகள் ஈரமாக இருந்தால், வெயிலில் சில மணி நேரம் உலர வைக்கலாம். அதனால் பூஞ்சை மறைந்து விடும். மேலும், உட் பர்னிச்சர் எதுவாக இருந்தாலும் அதன் மீது தண்ணீர் பட்டு விட்டால் உடனே துடைத்து விட வேண்டும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மெலமைன் பாலீஸ் செய்தால் உட் பர்னிச்சர் ஐட்டங்களை புதுப்பொலிவுடன் பாதுகாக்கலாம்.
எப்போதும் உட் பர்னிச்சர் வகைகளை வேறு இடத்திற்கு நகர்த்தும்போது கச்சிதமாக தூக்கி வைப்பது முக்கியம். அப்படியே இழுத்தவாறே நகர்த்தினால் தரைப்பரப்பில் கீறல் உண்டாகி, மரத்தின் கீழ்ப்பகுதி உடையலாம்.