கலையும் கைவண்ணமும் இணைந்த இந்திய வீடுகள்


கலையும் கைவண்ணமும் இணைந்த இந்திய வீடுகள்
x

நாம் வசிக்கும் வீடு நமக்கு பிடித்த மாதிரி ரம்யமான அழகோடு இருப்பது நம் தினசரி வாழ்வை இனிதாக்கும். உண்மையில் வீட்டு அலங்காரம் மிகப்பெரிய வேலை அல்ல. குறிப்பாக நம் நாட்டு பெண்கள் மிக எளிய பொருட்களைக் கொண்டே தங்களுடைய கற்பனையோடு நேர்த்தியாக வீட்டினை அழகு செய்து விடுவார்கள். அழகு படுத்தப்படும் இந்திய வீடுகளில் நிறங்கள், டிசைன்கள், மேஜை நாற்காலிகள், மேஜை மேல் வைக்கும் பொருட்கள், விளக்குகள் போன்றவை வீட்டின் அழகையும் நேர்த்தியையும் இணைத்து பாரம்பரிய இந்திய வீடாக காட்டக் கூடியவை.

நிறங்கள்:

வெறிச்சென்ற வெள்ளை வெளிர் மஞ்சள் கருப்பு வெள்ளையும் சாம்பல் நிறமும் சேர்ந்தது என்பது போன்று இந்திய வீடுகளில் நிறங்கள் இடம் பெறுவதில்லை. பளிச்சென்ற சிவப்பு, அடர்ந்த பச்சை, வெளிற் மற்றும் அடர் மஞ்சள், பச்சை நிறம், பல பல வண்ண கலவையில் நீல நிறம் இத்துடன் வெண்மையும் கருப்பும் பாக்கு நிறமும் கலந்து நம் வீட்டின் அலங்காரம் மிகவும் உற்சாகமூட்ட கூடியதாகவும் பளிச்சென்று கண்களுக்கு விருந்தளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சில வீடுகளில் சுவரின் நிறம் வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை மற்றும் வெளிர் சாம்பல் நிறத்தில் இருந்தாலும் திரைச்சீலைகளும், சோபா, கார்பெட், சோபாவில் உபயோகப்படுத்தும் குஷன் கவர்கள் போன்றவை பலவித அழகிய பளிச்சென்ற வண்ணங்களில் இருப்பதால் அது ஒரு அழகிய கலவையாக கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இருக்கும்.

டிசைன் மற்றும் வேலைப்பாடுகள்

இந்திய வீடுகளின் அலங்காரப் பொருட்களில் அழகான வேலைப்பாடுகளும் வித்தியாசமான டிசைன்களும் பெரிதாக இடம்பெற்றிருக்கும். காரை பிரிண்ட்ஸ், அஜ்ரத் பிரிண்ட், கலம்காரி, பாந்தினி, பத்திக் போன்ற பாரம்பரியமிக்க வேலைப்பாடுகள் அல்லது பிரிண்ட்கள் கொண்ட சோபா கவர், குஷன் கவர், சுவர்களில் தொங்கவிடப்படும் அலங்காரப் பொருட்கள், கார்பெட், பொம்மைகள், சரவிளக்குகள் என்று பலவற்றிலும் இவற்றை காண முடியும். இந்த வேலைப்பாடுகளில் பளிச்சென்ற நிறங்கள் கண்களை கவரக்கூடியதாக இருக்கும்.

ஃபர்னிச்சர்

இந்திய வீடுகளில் பாரம்பரிய பர்னிச்சர் வகைகள் ஒன்று இரண்டாவது இடம் பெற்றிருக்கும். கடைசல் செய்யப்பட்ட பர்னிச்சர்கள்,, கட்டில்கள் டைனிங் டேபிள்கள், சாய்வு நாற்காலிகள் போன்றவை அழகான கம்பீரமான தோற்றத்தை கொடுக்கக் கூடியவை. மரத்தால் ஆன கார்விங் வேலைப்பாடுகள், ஜாலி தடுப்புகள் போன்றவை வீட்டின் அழகை மேலும் அழகு ஊட்டக் கூடியவை. மரம் கண்ணாடி மற்றும் மூங்கில் போன்றவை பெரும்பாலான இந்திய வீடுகளில் ஃபர்னிச்சர்களாக இடம்பெறுவதை பார்க்க முடியும்.

சுவர் அலங்காரங்கள்

இந்தியா பலதரப்பட்ட கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை கொண்ட நாடு. இங்கு பலவிதமான கைவினைப் பொருட்கள் கிடைக்க கூடியது. சுற்றுலா செல்லும் பொழுது வாங்கி வந்தது, நண்பர்கள் பரிசளித்தது, பாரம்பரிய பொருட்கள் விற்கும் கடைகளில், காதி போன்ற அரசு விற்பனைக்கூடங்களில் கிடைக்கக்கூடிய பல சுவர் அலங்காரங்கள் அழகு கவர்ச்சி தனித்துவம் போன்றவற்றை ஒருங்கே கொண்டதான சுவர் அலங்காரங்கள் ஆகும். கடவுள் உருவம் பதிக்கப்பட்ட படங்கள், சிலைகள், பூக்கள்,, வண்ண ஓவியங்கள் தஞ்சாவூர் பெயிண்டிங்குகள் போன்றவை வீட்டின் தோற்றத்தை நளினமானதாகவும் நறுவிசாகவும் காட்டக் கூடியவை. இதேபோல் வீட்டின் கூரையிலிருந்து தொங்கக்கூடிய விளக்குகள், செடிகளை தாங்கி நிற்கும் தொட்டிகள் பூக்களை தாங்கி நிற்கும் கூடைகள் என்று பலவற்றையும் கூரையிலிருந்து தொங்கவிட்டு அழகு படுத்துவர் இந்திய மக்கள்.

செடிகள் பூக்கள் போன்ற இயற்கை சார்ந்த அலங்காரங்கள்

வீட்டின் உள்ளே வைக்கக்கூடிய செடிகளை பீங்கான் டெரக்கோட்டா பித்தளை வெண்கலம் செப்பு போன்ற பாத்திரங்களில் கூடைகளில் வைத்து அலங்காரம் செய்வது இந்திய வீடுகளில் பெரும்பாலும் காணக்கூடியவை. அகலமான கிண்ணம் போன்றவற்றில் வண்ணப் பூக்களை தண்ணீர் ஊற்றி அடுக்கி அலங்காரம் செய்வதும் இந்திய வீடுகளில் வாசல்களிலும் பூஜை அறையிலும் காணக்கூடியது. அழகும் கவர்ச்சியும் பாரம்பரியமும் தனித்துவமும் கொண்ட மேற்கூறிய வகையில் அலங்கரிக்கப்படுவதால் இந்திய வீடுகள் பிரத்தியேகமான அழகை பெற்று விளங்குகிறது.


Next Story