வீடுகளுக்கு அவசியமான வெப்ப தடுப்பு
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நவீன முறைகளில் தயாரிக்கப்பட்டு வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு அழகான வெப்ப தடுப்புகளான சன் ஷேடுகள் அழகு செய்வதோடு, சூரிய வெப்பம் மற்றும் அதிகப்படியான வெளிச்சம் ஆகியவற்றை தடுக்கவும் உதவுகின்றன. கட்டிட அமைப்புகள் அனைத்திலும் ஜன்னல்கள் தவறாமல் இருக்கும்.
அவற்றின் வெளிப்புறத்தின் மேல் பகுதியில் சூரிய வெப்ப தடுப்புக்காக வெப்பத்தடுப்பு என்ற சன் ஷேடுகள் அமைக்கப்படுவது வழக்கம். 30 வகைக்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்கள் மற்றும் மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அத்தியாவசியமான கட்டிட பகுதிக்கான வெப்பத்தடுப்பு என்ற நிலையில் வெளிப்புற அழகில் அவை முக்கியமான பங்கு வகிக்கின்றன.
ஜன்னல்களின் வெளிப்பக்கம் அழகாக அமைக்கப்படும் அவை நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய கண்கவர் வண்ணங்களில் கிடைக்கின்றன. சூரிய வெளிச்சமானது வண்ணங்களுக்கேற்ப கிரகிக்கப்பட்டு வெளிச்சம் தருவதோடு, புற ஊதா கதிர்களை தடுத்து விடுவதால் அறையின் வெப்ப நிலை அதிகமாவதில்லை.
வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்களின் வழியாக சூரிய வெப்பம் வீட்டுக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் திசைகளுக்கேற்ப அவற்றை பொருத்த வேண்டும். அதே சமயம் வெளிச்சம் தடுக்கப்படாமலும் இருக்க வேண்டும். இந்த இரு பணிகளையும் ஒருங்கே செய்யக்கூடிய வகையில் சன் ஷேடு என்ற வெப்பத்தடுப்பு ஷீட்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட அலுமினிய தயாரிப்புகளில் ஏர் பாயில் சன்ஷேடு, டே அன்டு லைட் சன் ஷேடு, ஆர்க்கிடெக்சுரல் சன்ஷேடு என்று பல விதங்களில் சந்தையில் கிடைக்கின்றன. இந்த வகைகளில் ஒவ்வொன்றும் அதன் பெயருக்கு ஏற்ற வகையில் செயல்படும் தன்மை கொண்டவையாகும்.
அறைகளில் நிலவும் சீதோஷ்ண நிலையை எல்லா நேரங்களிலும் சீராக வைத்துக்கொள்வதில் ஏர் பாயில் சன் ஷேடு வகை கச்சிதமாக செயல்படுகிறது. இன்பில் சன்ஷேடு வகையானது இரவில் வண்ண மயமாக கண்களை கவரும். ஆர்க்கிடெக்ட் சன்ஷேடுகள் பலவித டிசைன்களில் இருப்பதோடு, செங்குத்து வசத்திலும்கூட அமைத்துக்கொள்ள இயலும்.
இன்றைய நிலையில் பைபர் கிளாஸ் மற்றும் அலாய் போன்ற பல்வேறு மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்ட சன்ஷேடுகள் உபயோகத்தில் உள்ள நிலையில், அலுமியம் கொண்டு உருவாக்கப்பட்டவை பொருத்துவதற்கு எளிதாக உள்ளதென பலரும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பருவ நிலை மாற்றங்களால் உண்டாகும் தட்பவெப்ப நிலை மாற்றங்களுக்கு அலுமினிய சன் ஷேடுகள் பொருத்தமாக இருப்பதாக கட்டுமான நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அலுமினியம் கொண்டு உருவாக்கப்படுவதால், வெளிப்புற வெப்பத்திற்கேற்ப வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இவ்வகை தகடுகள் 6 அங்குலம் முதல் 14 அங்குல அகலம் கொண்ட அளவுகளில் சந்தையில் கிடைக்கின்றன. அனைத்து வகைகளையும் பருவநிலை மாற்றம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டு பொருத்திக்கொள்ளலாம்.