சுவரில் வெடிப்புகள் - காரணங்களும் தீர்வுகளும்


சுவரில் வெடிப்புகள் - காரணங்களும் தீர்வுகளும்
x
தினத்தந்தி 22 July 2023 8:39 AM IST (Updated: 22 July 2023 9:46 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக கட்டிய வீட்டுச் சுவரில் வெடிப்புகளை பார்க்கிறீர்களா? இதற்கு பல காரணங்களை கூற முடியும்.

உங்கள் வீடு சமீபத்தில் கட்டியதாக இருப்பின் இந்த மாதிரி மிக மெல்லிய வெடிப்புகள் சகஜமான ஒன்று. காலப்போக்கில் அது தானாகவே சரியாகிவிடும். இது கதவுகளுக்கு மேலும் ஜன்னல்களுக்கு மேலும் ஏற்படும் மிக மெல்லிய தலைமுடி அளவிலான வெடிப்புகளாக இருக்கும். இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. வீட்டை புழங்காமல் பூட்டி வைக்கும் பொழுது, இதனால் சுவர்களில் வெடிப்பு ஏற்படலாம். வீடு கட்ட பயன்படுத்தப்படும் மரங்கள், இரும்புகள், பீம் போன்றவை சுருங்குவதாலும் விரிவடைவதாலும் வெடிப்புகள் ஏற்படலாம். இதுவும் மிக மெல்லியதாக இருக்கும். மேற்கூறையின் தாங்கும் அளவிற்கு கூடுதலாக மேலே பலு இருக்கும்பொழுது இதனாலும் சுவற்றில் வெடிப்புகள் ஏற்படும் சுவரில் ஏற்படும் வெடிப்புகளை ஒட்டி கரைகள் இருக்குமானால், மாறுபட்ட நிறம் இருக்குமானால், அது உட்புறத்தில் நீர்க்கசிவு இருக்கிறது என்பதை குறிப்பதாக இருக்கும்.

மிகவும் பெரிய அளவில் கோணல் மானலாக இருக்கக்கூடிய ஒரே வரிசையில் இல்லாமல் குறுக்கு குறுக்கும் நெடுக்குமாக ஏற்படக்கூடிய பெரிய விரிசல்கள் கட்டுமான பிரச்சனையை குறிக்கக் கூடியது. வீட்டைக் கட்டி முடித்த ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் மிக மெல்லிய சிறிய அளவிலான வெடிப்புகள் இருப்பின் அவற்றைப் பற்றி வருந்த வேண்டாம். சரி, இவ்வாறு ஏற்படும் வெடிப்புகளால் என்ன ஆபத்துக்கள் உள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

குறுக்காக ஏற்படும் விரிசல்கள்:

குறுக்குவாட்டில் ஏற்படும் விரிசலோ அல்லது 45 ° கோணத்தில், கோனல் மானலாக ஏற்படும் விரிசலோ கட்டிடத்தின் அடித்தளம் சரியாக போடப்படாததையோ அல்லது நீர்நிலை வீட்டின் அடித்தளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கக்கூடியது. இம்மாதிரியான விரிசல் இருப்பின் அதை உடனடியாக கட்டிட பொறியாளரை கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கட்டுமானத்தில் பெரிய அளவில் செலவையும் உடனடி கவனத்தையும் ஈர்க்கக் கூடியது இவ்வகையான விரிசல்களே.

படிக்கட்டுகள் போல்இருக்கும் விரிசல்கள்

சில நேரத்தில் சுவர்களில் படிக்கட்டு போல் அதாவது குறுக்கு கோடு பின்பு நெடுக்காக ஒரு கோடு மீண்டும் குறுக்குவாட்டில் ஒரு கோடு என்று படிக்கட்டு போல் விரிசல்கள் ஏற்படும். புதிதாக கட்டிய வீட்டில் இம்மாதிரியான விரிசல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரியாகி விடக் கூடியது. ஆனால் இந்த விரிசலின் அளவு அரை அங்குலத்திற்கு அதிகமாக இருக்கிறது எனும் பட்சத்தில் அதை உடனடியாக கவனிக்க வேண்டும்.

ஆணி மற்றும் ஸ்க்ரூ வெளிப்படுவது

சுவற்றில் ஆணி ஸ்க்ரூ போன்றவை நாம் அடித்து வைத்திருப்போம். அந்த ஆணியோ அல்லது ஸ்க்ரூவோ அதனுடனான மரத்துண்டுடன் சில நேரங்களில் சுவற்றில் இருந்து வெளியே தள்ளப்படுவதுண்டு. அம்மாதிரி சமயங்களில் இது கட்டுமானத்தில் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினையாக இருக்கலாம். எனவே இதற்கு உடனடியாக பொறியாளரை கலந்தாலோசித்து பழுது பார்க்க வேண்டியது அவசியம்.

வீட்டில் மேற்கூரையில் வெடிப்புகள்

ஒரு கட்டிடத்தின் வயது, அளவு மற்றும் அது இருக்கும் இடத்தை பொறுத்து வீட்டின் கூரையில் வெடிப்புகள் ஏற்படலாம். கதவின் மேற்புறம் ஜன்னலின் மேற்புறத்தில் இருந்து வீட்டின் கூரை வரை நீளும் மிக மெல்லிய வெடிப்புகள் கட்டிடம் கட்டிய ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் ஏற்பட்டால் அவற்றை லேசாக பூச்சு வேலை மற்றும் பெயிண்டிங் மூலம் சரி செய்து விடலாம். ஆனால் இதுவே மிகப்பெரிய வெடிப்பாக இருக்கும் பட்சத்தில் அது கடைக்கால் வரையில் ஏற்படக்கூடிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

கதவுகள் மற்றும் ஜன்னல்கள்

படுக்கை அறை குளியல் அறை போன்றவற்றின் கதவுகளை சாத்தும் பொழுது அவை ஒட்டிக் கொள்வதோ திறக்க முடியாமல் அழுந்து கொள்வதோ ஏற்படலாம். இது பொதுவாக குளிர்காலங்களில் ஏற்படக்கூடியதாக அதாவது கதவின் மரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினையாகவோ, கதவின் பிரேம்கள் முருக்குவதால் ஏற்படக் கூடியதாகவோ இருக்கலாம். அப்படி இல்லாமல் கதவை திறப்பதும் மூடுவதும் சுலபமாக இருந்தும் கதவு ஒட்டிக் கொள்வதாக இருந்தால், அது கட்டிடத்தின் கடைகால்களில் ஏற்படக்கூடிய பிரச்சனையாகவும் இருக்கலாம். இது சற்றே அதிகமாகும் பொழுது அகலமான விரிசல்களை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Next Story