உறுதியான கட்டிடம் அமைக்க உதவும் கான்கிரீட் கலக்கும் எந்திரம்
கட்டுமான வல்லுனர்களின் கருத்துப்படி பொருட்களின் எடை அளவை கணக்கிட்டு சிமெண்டு, மணல் கலவையை தயாரிப்பதே பாதுகாப்பான முறையாகும். பலரும் பொருட்களின் கொள்ளளவு முறையில் சிமெண்டு கலவையை தயாரிக்க காரணம், எடை அளவு முறையை நடைமுறையில் கடைபிடிப்பது சிக்கலான முறையாக இருப்பதால்தான்.
காரணம், சிமெண்டு மட்டுமே எடை குறிப்பிடப்பட்டுள்ள மூட்டையாக கிடைக்கும். மணல், ஜல்லி போன்றவை லோடு கணக்கில் வாங்கப்படுவதால் அவற்றை, ஒவ்வொரு முறையும் கச்சிதமாக எடை போட்டு கலவை கலக்கும் பணியை செய்வது பணிகளின் வேகத்துக்கு ஒத்து வருவதில்லை.
கட்டுமான பணிகளில் விழிப்பாக இருந்து செயல்பட வேண்டிய பணி கான்கிரீட் கலவை தயாரிப்பதாகும். கான்கிரீட் இடுவது அல்லது மேற்பூச்சு ஆகிய பணிகளுக்கு வெவ்வேறு விகிதங்களில் சிமெண்டு, மணல் கலவை அமைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு தடவையும் கலவை பணிகளை மேற்பார்வை செய்வது அவசியம்.
கலவைக்கு தேவையான சிமெண்டு, மணல், ஜல்லி மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பொருட்களின் கொள்ளளவு முறையில் கணக்கீடு செய்து கலப்பதா அல்லது அவற்றின் எடைக்கேற்ப கலப்பதா என்பது பற்றிய அனுபவ ரீதியான மாற்றுக்கருத்துகள் கட்டுமான பணியிடங்களில் ஏற்படக்கூடும்.
இந்த சிக்கலை தவிர்ப்பதற்காக தனியார் நிறுவனம் சுமார் 400 லிட்டர் கொள்ளளவு உடைய நவீன கான்கிரீட் கலவை மெஷின் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. சுமார் 1400 கிலோ எடை கொண்ட அந்த மெஷினை 7.5 குதிரைத்திறன் கொண்ட மின்சார மோட்டார் இயக்குகிறது. கலக்குவதற்கான தண்ணீரை உள்ளே செலுத்துவதற்கும் சிறிய மின் மோட்டாரும் உள்ளன. அதில் போர் வாட்டர் அல்லது மெட்ரோ வாட்டர் மெயின் குழாயுடன், மெஷினுக்கான பைப் லைனை இணைக்க வேண்டும். காரணம், ஒவ்வொரு முறையும் தண்ணீரை அளந்து ஊற்ற வேண்டிய அவசியமில்லை. மற்ற பொருட்களின் அளவுக்கேற்ப சரியான அளவு தண்ணீர் தாமாகவே மெஷினுக்குள் செலுத்தப்படும். அதனால், கலவையின்போது செய்யப்படும் மனிதத்தவறுகள் ஏற்படுவதில்லை. கலவை மெஷின் உருளையில் இணைக்கப்பட்டுள்ள பக்கெட்டில் போடப்படும் மணல் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் எடையை எளிதாக கணக்கிட்டுக்கொள்ள வசதியாக பக்கெட்டுடன் எடை அளவு காட்டும் எலக்ட்ரானிக் டிஸ்பிளே இணைக்கப்பட்டுள்ளது. அதனால், செய்யப்படும் பணிகளின் தரத்திற்கேற்ப சிமெண்டு மற்றும் கச்சிதமான எடையுள்ள ஜல்லி, மணல் எடையை கணக்கிட்டு உருளையில் போடலாம்.
அதன் மூலம், பொருட்களுக்கான எடை அடிப்படையில் சரி விகித கலவை எளிதாக தயாரிக்கப்படும். குறிப்பாக, கலவைக்கான தண்ணீர் எடை அளவு என்ன என்பதும் கணக்கிட்டு, கலக்கப்படுவதால் கலவை நீர்த்துப்போய் விட்டது அல்லது தண்ணீர் போதவில்லை என்ற சிக்கல்களால் கலவையில் மீண்டும் தண்ணீர் கலக்கப்படும் குறைகள் உருவாகாது.