வாரம் ஒரு திருமந்திரம்...!
திருமந்திரத்திற்கு 'மூவாயிரம் பாடல்' என்ற பெயரும் உண்டு. திருமூலர் வருடத்திற்கு ஒரு பாடல் என்று, மூவாயிரம் ஆண்டுகளாக திருமந்திரத்தில் தொகுக்கப்பட்ட மூவாயிரம் பாடல்களையும் பாடியிருக்கிறார். சைவ நெறியையும், சிவபெருமானின் சிறப்பையும் எடுத்துரைக்கும் இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே.
விளக்கம்:-
நெற்றிக்கு நேராகப் புருவங்களின் மத்தியிலான இடைவெளியில் உற்று உற்று நோக்க சிவசிவ என்ற மந்திரம் ஒளிவிடும். பற்றற்றவர், பற்றுக்குப் பொருளாக விளங்கும் இறைவன், நம் உடம்பில் சிற்றம்பலமாக உறையும் இடம் எதுவென்று அறிந்து கொண்டேன்.