வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது
மயிலாடுதுறை;
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோவில் எனப்படும் ஞானாம்பிகை வதான்யேஸ்வரர் கோவில் உள்ளது. மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் வடக்கே உத்தர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளலாக ஞானத்தை அள்ளித்தரும் பெருமானாக வதான்யேஸ்வரர் அருள்பாலிக்கிறார். சப்த மாதாக்களில் சாமுண்டிதேவி ஞானாம்பிகையை பூஜித்து வழிபாடு செய்த தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. இக்கோவில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கையொட்டி பூர்வாங்க பூஜைகள் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்த நிலையில் இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.