திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம் - உற்சவர் தங்கத்தேரில் பவனி


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம் - உற்சவர் தங்கத்தேரில் பவனி
x

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. மாலை உற்சவர் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருமலை:

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு மாலை உற்சவர் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தங்கயிழை சேலையில் தாயார்

திருச்சானூர் பத்மாவதிதாயார் கோவிலில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நேற்று வரலட்சுமி விரதம் நடந்தது. அதையொட்டி அதிகாலை மூலவர் பத்மாவதிதாயாரை சுப்ரபாதத்தில் துயில் எழுப்பி சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை மற்றும் மூலவர், உற்சவர் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது. இந்த உற்சவங்களில் பத்மாவதிதாயார் தங்கயிழை சேலையில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதன்பிறகு பத்மாவதிதாயார் உற்சவர் தாயார் ஆஸ்தான மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பத்மபீடத்தில் வைக்கப்பட்டார். அங்கு விஷ்வக்சேனர் வழிபாடு, புண்யாஹவச்சனம், கலச ஸ்தாபனம், அம்மன் வழிபாடு, லட்சுமி சஹஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்திர சத நாமாவளி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

அப்போது பாரம்பரிய மலர்களான ரோஜா, சாமந்தி, மல்லிகை, சம்பங்கி, துளசி, பன்னீர் இலை மருவம், தாமரை போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தாயாருக்கு 12 வகையான நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மகா மங்கள ஆரத்தியோடு வரலட்சுமி விரதம் நிறைவடைந்தது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது வீரபிரம்மன் கூறியதாவது:-

வரம் தரும் அம்மன்

கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடந்த வரலட்சுமி விரத பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர். விரத பூஜையில் பங்கேற்க 550 தரிசன டிக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, உற்சவள் முறையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

வரம் தரும் அம்மன் என்பதால் வரலட்சுமி என அழைக்கப்படுகிறார். வரலட்சுமி விரத பூஜையை பக்தர்கள் கடைப்பிடித்தால் அஷ்டலட்சுமியை வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மலர் அலங்காரம்

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் உற்சவர் பத்மாவதிதாயார் தங்கத்தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை மூலம் ஆஸ்தான மண்டபத்தில் விரத பூஜை மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மலர் அலங்காரம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. 15 பணியாளர்கள் 2 டன் பாரம்பரிய மலர்கள் மற்றும் 25 ஆயிரம் கொய்மலர்கள் மூலமாக 3 நாட்களாக கடுமையாக உழைத்து கோவில், ஆஸ்தான மண்டபம், விரத மண்டபங்களை அலங்காரம் செய்தனர்.

அதில் வெற்றிலை மற்றும் ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி, அன்னாசி போன்ற பழங்களும், பல்வேறு பாரம்பரிய மலர்களும் விரத மண்டபத்தை அலங்கரித்தன. மண்டபத்தின் மேல் பகுதியில் கஜலட்சுமி தேவியும், கீழ் பகுதியில் இருபுறமும் ஐராவதங்களும் (யானைகள்) சிறப்பாக இருந்தது.

அகண்ட ஒளித்திரைகள்

ஆஸ்தான மண்டபம் அஷ்டலட்சுமி மூர்த்திகளாலும், ரோஜா, தாமரை போன்ற பல வண்ணமலர்களாலும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் காணிக்கையால் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

பக்தர்கள் அனைவரும் வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்று தாயாரை வழிபடுவதற்காக ஆஸ்தான மண்டபம், புஷ்கரணி, கங்குந்திரா மண்டபம் ஆகிய இடங்களில் அகண்ட ஒளித்திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒளி பரப்பப்பட்டது. அதை, பக்தர்கள் கண்டு களித்தனர்.


Next Story