இலங்கையில் இருந்து கொண்டு வந்த ராமர் பாதுகைகளுக்கு ராமேசுவரம் கோவிலில் சிறப்பு பூஜைகள்
இலங்கையில் இருந்து கொண்டு வந்த ராமர் பாதுகைகளுக்கு ராமேசுவரம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமேசுவரம்,
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி நாட்டின் முக்கிய தலங்களில் இருந்து புனிதநீர், அயோத்திக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்வதற்காக ராமர் பாதுகைகள் இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, மதுரையில் இருந்து நேற்று வாகனம் மூலம் ராமர் பாதுகைகள் ராமேசுவரம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. ராமராஜ் யாத்திரை அமைப்பினர், பாதுகைகளை ராமேசுவரம் கோவிலில் வைத்து பூஜை செய்து தரிசனம் செய்தனர்.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கும் கொண்டு சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அந்த பாதுகைகளுடன் திருச்சி புறப்பட்டு சென்றனர்.
ராமர் பாதுகைகள் பல மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு செய்த பின்னர், அயோத்தி ராமர் கோவிலில் சேர்க்கப்படுகின்றன.