மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு


மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
x

கோப்புப்படம் 

மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை,

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மண்டல பூஜை முடிவடைந்ததும் அன்றைய தினம் இரவு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. மகர விளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 15-ந் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.


Next Story